×

மேட்டூர் அணை உபரிநீர் போக்கி கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம்

*வரும் முன் காக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மேட்டூர் மேட்டூர் அணை உபரிநீர் போக்கி கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றாவிட்டால், பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை காலங்களில், காவிரியில் ஏற்படும் பெருவெள்ளம் காரணமாக, தமிழகத்தில் சேதம் ஏற்படுவதை தடுக்கவும், மழைநீரை சேமித்து பாசனம் மற்றும் மின் உற்பத்திக்கு பயன்படுத்தவும், சேலம் மாவட்டம் மேட்டூரில் அணை கட்டப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 90 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து 9 ஆண்டுகள், மேட்டூர் அணையின் கட்டுமான பணிகள் நடைபெற்றது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் ஆகிறது. 59.25 சதுரமைல் பரப்பு கொண்ட மேட்டூர் நீர்தேக்கத்தில், 93.47 டி.எம்.சி தண்ணீரை தேக்க முடியும். மேட்டூர் அணை பாசனம் மூலம், 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம், 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 22 மாவட்டங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, 150க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் உபரிநீரை வெளியேற்ற, அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக, விநாடிக்கு 3,56,429 கனஅடி நீரை வெளியேற்ற முடியும். அணையின் வலதுகரையில் உள்ள 814 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்கரை கொண்ட வெள்ளப்போக்கி மூலம், அணைக்கு எவ்வித சேதமும் இன்றி மிக அதிகமான வெள்ளநீரை, விநாடிக்கு 50,400 கனஅடி நீரை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல்மட்ட மதகுகள், கீழ்மட்ட மதகுகள், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாகவும், வெள்ளநீரை வெளியேற்ற முடியும். வெள்ள காலத்தின் போது மேட்டூர் அணையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அமைப்புகளையும் கொண்டு, விநாடிக்கு 4.43 லட்சம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,16,400 கனஅடியாக இருந்தால், அணையின் வலது கரையில் உள்ள மண்கரை கொண்ட வெள்ளப்போக்கி வழியாக உபரிநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக திறக்கப்படும் தண்ணீர், சுமார் 7 கிமீ தொலைவு சென்று, மீண்டும் காவிரியில் கலக்கிறது. அதேபோல் மண்கரை வெள்ளப் போக்கியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், வெள்ளநீர் கால்வாய் வழியாக 4 கி.மீ தொலைவு சென்று, மீண்டும் காவிரியில் கலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கால்வாய் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, சாக்கடை போல காணப்படுகிறது.

மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பாக, 1924ம் ஆண்டு ஜூலை 26ம் நாள், அதிகபட்சமாக காவிரியில் விநாடிக்கு 4,56,000 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. மேட்டூர் அணை கட்டிய பிறகு, 1961ம் ஆண்டு ஜூலை 8ம் நாள் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,01,052 கனஅடி நீர் அதிகபட்சமாக வந்துள்ளது. அப்போது அதிகபட்சமாக மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2,84,606 கனஅடி வீதம் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணையின் 91 ஆண்டு கால வரலாற்றில், 42 ஆண்டுகள் மட்டுமே அணை முழு கொள்ளவை எட்டி உள்ளது, 44 ஆண்டுகள் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியாகவும், நீர் இருப்பு 43 டி.எம்.சியாகவும் இருந்தது. அப்போது திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, அணைக்கு விநாடிக்கு 2,53,750 கனஅடி வீதம் தண்ணீர் வரத்தொடங்கியது. ஒரே இரவில் அணையின் நீர் மட்டம் 18 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 23 டி.எம்.சி அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால், மேட்டூர் அணையில் தண்ணீரை தேக்க முடிந்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்திருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

நூறாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பெருவெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மேட்டூர் அணையின் உபரிநீர் செல்லும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள், வணிக வளாகங்களாக மாறி உள்ளது. உபரிநீர் வழித்தட ஆக்கிரமிப்புகளில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கு அதிகமானோர் வசித்து வருகின்றனர். திடீர் வெள்ளக் காலத்தில் குடியிருப்பு வாசிகளை அப்புறப்படுத்துவதில், பெரும் சிக்கல் ஏற்படும்.

எனவே, முன்கூட்டியே ஆய்வு மேற்கொண்டு அணையின் வலதுகரையில் மண்கரை வழியாக வெள்ளநீர் வெளியேறும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அணையின் இடதுகரையில் உபரிநீர் போக்கி கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் பெரும் உயிர்சேதமும், பொருட்சேதமும் தவிர்க்க முடியாததாகி விடும். பெருவெள்ள காலத்தில் எப்சேடல் எனப்படும் (பிளட் சேடல்) மண்கரையை உடைத்து வெள்ளத்தை வெளியேற்ற தாமதமானால், மேட்டூர் அணை சேதம் அடைய வாய்ப்புள்ளது.

The post மேட்டூர் அணை உபரிநீர் போக்கி கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Matur ,MATUR MATUR DAM ,Mattur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து காவிரி...