×

ஒடுகத்தூர் அருகே பைக் மோதியதில் பலியான முதியவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

*2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஒடுகத்தூர் ஒடுகத்தூர் அருகே பைக் மோதியதில் பலியான முதியவர் சடலத்துடன் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(75), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாள்(70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். வள்ளியம்மாள் தனது மகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். முதியவர் கிருஷ்ணன் மட்டும் ஓலை குடிசையில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ணன் தனது வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒடுகத்தூரில் இருந்து மராட்டியபாளையம் வழியாக மதுபோதையில் பைக்கில் அதிவேகமாக வந்தவர் திடீரெனகிருஷ்ணன் மீது மோதினார். இதில், கிருஷ்ணனின் கால்கள் பைக்கில் சிக்கி தரதரவென சாலையில் சிறிது தூரம் இழுத்து சென்றது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதற்கு இடையே பைக்கில் வந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

மேலும், தகவலறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், விபத்தில் பலியான முதியவர் சடலத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் போவதால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை கைது செய்யும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பெரிய கற்கள், விறகு கட்டைகளை சாலையில் போட்டு எந்த வாகனங்கள் செல்லாதபடி சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது, சடலத்தை எடுக்க வந்த ஆம்புலன்சை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியலால் இருபுறங்களிலும் அரசு, தனியார் பஸ்கள், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வரிசை கட்டி நின்றது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வேலூரில் இருந்து ஒடுகத்தூர், ஆலங்காயம், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் குருவராஜபாளையம் வழியாக தான் சென்று வருகிறது. ஆனால், இந்த முக்கியமான சந்திப்பில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பும் நிகழ்கிறது. இதில், கடந்த 3 வாரத்திற்கு முன்பு பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார்.

இப்போது அதன் சுவடுகள் மறைவதற்குள் முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை கூடும் இடங்களில் விபத்துகள் நடைபெறுவதால் ஏற்கனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்து சம்பவங்கள் நடக்காமல் இருக்க பஸ் நிலையம், குடியிருப்பு அதிகமுள்ள பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிடு கலைந்து சென்றனர். இந்த, மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேகத்தடை அமைக்க கோரிக்கை

குருவராஜபாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். நகை, ஓட்டல், துணி கடை, பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதால் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். மேலும், காய்கறிகள், பழங்கள் போன்றவை விற்பனைக்காக வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று சந்தை கூடுகிறது. மக்கள் அதிகம் கூடும் இந்த இடத்தில் விபத்துகள் அதிகம் நடக்கிறது. எனவே, முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஒடுகத்தூர் அருகே பைக் மோதியதில் பலியான முதியவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Vellore district ,Odukathur ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனவிலங்குகளை...