×

ஒடுகத்தூர் பேரூராட்சியில் சிதலமடைந்து காணப்படும் 150 ஆண்டுகளை கடந்த வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும்

*லட்சக்கணக்கில் வியாபாரம்

*குடிமகன்களின் கூடாரமான அவலம்

ஒடுகத்தூர் ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெறுவதால் சிதலமடைந்து காணப்படும் 150 ஆண்டுகளை கடந்த வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று ஒடுகத்தூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் மட்டுமின்றி மேலரசம்பட்டு, தீர்த்தம், சேர்பாடி, மடையாப்பட்டு, கீழ்கொத்தூர், ஏரியூர், வரதலம்பட்டு, ஆசனாம்பட்டு, அத்திகுப்பம், நேமந்தபுரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும், கிராமங்கள் அதிகம் உள்ளதால் இங்கு விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் விளையக்கூடிய கொய்யா, மாங்காய், வாழை, தக்காளி, கத்தரி, வெண்டை, கீரை வகைகள், பழ வகைகள் என அனைத்து விதமான காய்கறிகளை ஒடுகத்தூரில் அமைந்துள்ள வாரச்சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி மலை கிராமங்களில் விளையக்கூடிய வரகு, சாமை, திணை, மலை புளி, தேன், பலாப்பழம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை இங்கு வந்து தான் சந்தைப்படுத்துகின்றனர். இந்த சந்தையானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படும் இந்த வாரச்சந்தை சுமார் 150 ஆண்டுகளை கடந்து இன்றளவும் நடந்து வருவதால் வாரந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் கூடி பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

முதன் முதலில் ஓலை கொட்டகையில் தொடங்கப்பட்ட இந்த வாரச்சந்தை கடந்த 2001ம் ஆண்டு சிமெண்ட் சீட்டுகள் அமைத்து கடைகள் தொடங்கப்பட்டது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை ஏலம் விடப்படுவதால் ₹10 முதல் ₹20 லட்சம் வரை அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.இவ்வாறு சிறப்புகள் வாய்ந்த இந்த சந்தை தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது. அதேபோல், கடைகளின் மேற்கூரைகள் சிமெண்டாலான சீட்டுகள் அமைத்து 23 ஆண்டுகளுக்கும் மேலாவதால் முற்றிலும் சிதலமடைந்து காணப்படுகிறது.

இதனால் மழைக்காலங்களில் வாரச்சந்தை நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. அதேபோல், சுற்றுப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சந்தையில் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு நிலவி, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாரச்சந்தை மூலம் பல விவசாய குடும்பங்கள் பயன்பெறுவதால் சம்பந்தப்பட்ட மாவட்டம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு சிதலமடைந்த இதனை முழுவதும் அகற்றி விட்டு சந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி சந்தைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய சந்தையை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிமகன்களை கட்டுப்படுத்த வேண்டும்

ஒடுகத்தூர் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் வாரச்சந்தையில் குடிமகன்கள் மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விடுகின்றனர். இதனால், சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, காவல் துறையினர் குடிமகன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஒடுகத்தூர் பேரூராட்சியில் சிதலமடைந்து காணப்படும் 150 ஆண்டுகளை கடந்த வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Odugathur Municipality ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பைக் மோதியதில்...