×

ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் செல்ல அனுமதி இல்லை நீண்ட வரிசையில் நின்ற பருத்தி வாகனங்கள்

*கடும் போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் அனுமதிக்காததால் பருத்தி விவசாயிகளின் வாகனங்கள் பைபாஸ் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அத ற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர்.

அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பருத்தி பயிருக்கு கடந்தாண்டில் நல்ல விலை கிடைத்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இருமடங்கு அளவில் அதாவது 41 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு வாரத்தில் செவ்வாய்கிழமையன்று ஏல முறையில் கொள்முதல் செய்யப்படும் நிலையில் நடப்பாண்டில் இதற்கான கொள்முதல் ஏலம் என்பது இந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு நல்ல விலை கிடைத்த போதிலும் நடப்பாண்டில் வியாபாரிகளின் சிண்டிகேட் காரணமாகவும், அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமலும் இந்த பருத்தி பஞ்சுகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இருப்பினும் தனியாரிடம் உரிய விலை கிடைக்காததால் வேளாண் ஒழுங்குமுறை கூடத்தை அணுகி விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்காக வாரத்தில் செவ்வாய்கிழமை தான் ஏலம் என்ற போதும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் உள்ளே இடம் பிடிப்பதற்காக விவசாயிகள் தங்களது பருத்தி பஞ்சை ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளிலேயே உள்ளே எடுத்துசென்று அடுக்கி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நாளை (25ம் தேதி) நடைபெறவுள்ள ஏலத்திற்காக நேற்றைய தினமே விவசாயிகள் தங்களது பருத்தி பஞ்சை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தனர். ஆனால் அந்த வாகனங்களை விற்பனை கூடத்தின் உள்ளே செல்வதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் அனுமதி வழங்காததன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் சாலையில் ஒரு கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக திருவாரூர், நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், விற்பனை கூடத்தின் உள்ளே விவசாயிகளுக்காக அரசு சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.அதனை உரிய முறையில் அலுவலர்கள் பராமரிக்காததன் காரணமாக இடநெருக்கடி இருந்து வருகிறது. மேலும் வியாபாரிகளுக்கு செய்து கொடுக்கும் வசதியை கூட, விவசாயிகளுக்கு அலுவலர்கள் செய்துகொடுப்பதில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் செல்ல அனுமதி இல்லை நீண்ட வரிசையில் நின்ற பருத்தி வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Tiruvarur ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...