களக்காடு : களக்காடு தலையணையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையினரால் சுற்றுச் சூழல் சுற்றுலாதலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளிர்ச்சியுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் தலையணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே சுற்றுலா பயணிகள் கார்கள், டூவீலர்களில் குவிய தொடங்கினர்.
அவர்கள் மிதமான அளவில் ஓடும் தண்ணீரில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். தடுப்பணையை தாண்டி அருவி போல் விழும் தண்ணீரிலும் ஆர்வமுடன் குளித்தனர். அத்துடன் சாரல் மழையும் பெய்து குளு,குளுவென இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் அங்குள்ள பூங்காவில் விளையாடியும், பெரியவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் அமர்ந்து பேசி, குதூகலத்துடன் பொழுதை போக்கினர். மாலை வரை கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. முன்னதாக வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்களா? என்று வனத்துறையினர் சோதனை நடத்தினர். தலையணை சிறுவர் பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
The post விடுமுறை தினம் என்பதால் களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.