×

கருங்கல் பஸ்நிலையத்தில் பெண்களிடம் திருட்டு டிப்-டாப் இளம்பெண் சிறையில் அடைப்பு

கருங்கல் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலையத்தில் நேற்றுமுன்தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வைத்து இருந்த கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் ஏராளமான மணிபர்சுகள், செல்போன்கள் இருந்தன. தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணை வாகனத்தில் ஏற்றி கருங்கல் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், இளம்பெண் கோயம்புத்தூரை சேர்ந்த கவுசல்யா (30) என்றும், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பெண் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்ததும் தெரியவந்தது. இதற்கிடையே பூட்டேற்றி பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண் தனது கைப்பை, செல்போனை பறிகொடுத்த நிலையில் காவல் நிலையத்திற்கு வந்து புகார் செய்தார்.

அப்போது போலீசார் கவுசல்யாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பையை காண்பித்தனர். அதில் செல்வியின் கைப்பை, பணம் ஆகியவற்றை அடையாளம் காட்டினார். ஆனால் செல்போன் அதில் இல்லை என்றும் செல்வி கூறினார். இதையடுத்து அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவை கைது செய்தனர்.

பின்னர் அவரை இரணியல் (பொறுப்பு) நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் கவுசல்யாவை தக்கலை பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர். இதற்கிடையே கவுசல்யாவிடம் இருந்த மேலும் சில பர்ஸ் மற்றும் செல்போன்கள் யாருக்கு சொந்தமானவை என்ற தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கவுசல்யா உடன் வேறு யாரேனும் இந்த திருட்டில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகம் வராதாம்

கவுசல்யா அழகான சுடிதார் அணிந்துகொண்டு டிப்-டாப்பாக வலம் வருவாராம். பஸ் நிலையங்களில் நின்று கொண்டு நோட்டமிட்டவாறு, பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்சில் ஏறி நைசாக பர்ஸ், செல்போன்களை திருடுவதில் கவுசல்யா கில்லாடியாம். நன்குபடித்த, நல்ல வேலையில் இருக்கும் பெண் போல் இருப்பதால் யாருக்குமே சந்தேகம் வராதாம். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தற்போது போலீசில் சிக்கிவிட்டார்.

The post கருங்கல் பஸ்நிலையத்தில் பெண்களிடம் திருட்டு டிப்-டாப் இளம்பெண் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : tarnish ,station ,Karangal bus station ,Kanyakumari district ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை...