×
Saravana Stores

பாப்பாரப்பட்டி பகுதியில் தினசரி 1 டன் குண்டுமல்லி அறுவடை

*விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் தினசரி 1 டன் குண்டுமல்லி அறுவடை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.தர்மபுரி மாவட்டத்தில் பூச்செடிகள் சாகுபடி பிரதானமாக உள்ளது. தர்மபுரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான தொப்பூர், இண்டூர், பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, குண்டுமல்லி, காக்கட்டான், சன்னமல்லி, சௌந்தரரோஜா, பட்டன்ரோஜா, செவ்வந்தி, பன்னீர் ரோஜா, அரளி பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாப்பாரப்பட்டி அருகே பூகானஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். பருவமழையால் செழித்து வளர்ந்துள்ள குண்டுமல்லி செடிகளை கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பூகானஅள்ளி கிராம குண்டுமல்லி விவசாயிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பூகானஅள்ளி, வேலம்பட்டி, தட்டாரப்பட்டி, பள்ளிப்பட்டி, எர்ரப்பட்டி, பாடி என 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவலாக குண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மலர் சந்தைக்கு பாப்பாரப்பட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து தினமும் ஒரு டன் குண்டுமல்லி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த பகுதியில் ஏக்கர் கணக்கில் குண்டுமல்லி சாகுபடி செய்வதில்லை. ஆட்கள் கூலி, வேலை ஆள் பற்றாக்குறை போன்றவையால் 10 சென்ட் முதல் ஒரு ஏக்கருக்கும் குறைவாக குண்டுமல்லி பராமரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

பூ பறிப்பவர்களுக்கு கிலோவிற்கு ரூ.50 கூலி தரவேண்டும். இதனால், விலை சரியும் காலத்தில் நஷ்டம் ஏற்படும் என்பதால் குடும்பமாக பறிக்கும் அளவிற்கு குறைவாகவே சாகுபடி செய்கிறோம். இருந்த போதும் தர்மபுரி மாவட்டத்திலேயே அதிகளவில் சுமார் ஒரு டன் வரை குண்டுமல்லி பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து தான் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பாப்பாரப்பட்டி பகுதியில் தினசரி 1 டன் குண்டுமல்லி அறுவடை appeared first on Dinakaran.

Tags : Paparapatti ,Dharmapuri Paparapatti ,district ,Dharmapuri ,Toppur ,Indore ,Bennagaram ,Karimangalam ,Marandaalli ,Palakodu ,Pommidi ,
× RELATED அரசு நிலங்களில் மண் திருட்டு