×

பவானி அருகே ஓடையில் ஓடும் சாயக்கழிவு நீர் ஆற்றில் கலப்பது தடுக்கப்படுமா?

*பொதுமக்கள் வேண்டுகோள்

பவானி : பவானி அருகே சேர்வராயன்பாளையத்தில் பட்டப்பகலில் ஓடையில் கலக்கும் சாயக்கழிவு நீர், நேரடியாக சென்று பவானி ஆற்றில் கலக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த செங்காடு, சேர்வராயன்பாளையம், காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால் இங்கு, சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. மேலும், சட்டவிரோதமாக சாயக்கழிவுகளை பொது வெளியில் வெளியேற்றிய அனுமதியற்ற சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன.

இந்நிலையில் சேர்வராயன்பாளையம், மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஓடையில் கழிவுநீர் ஓடையில் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் பட்டப்பகலில் பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு நேரங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை ரகசியமாக சாயப்பட்டறைகள் திறந்துவிட்டு வந்த நிலையில், தற்போது பட்டப்பகலில் துணிகரமாக சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுவது அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் ஓடைகளில் மழைநீருடன் சாயக்கழிவு நீரும் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சேர்வராயன்பாளையத்தில் ஓடையில் சாயப்பட்டறைகள் திறந்துவிடும் சாயக்கழிவு நீர் நேரடியாக சென்று பவானி ஆற்றில் ஓடும் தண்ணீரில் கலந்து வருகிறது. சாயக்கழிவுகள் கலந்த பவானி ஆற்று நீர், காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. சாயக்கழிவு நீர் நேரடியாக விவசாய நிலங்களுக்கு சென்று, வேளாண் நிலங்கள் ரசாயனக் கலப்பால் மாசடைந்து வருகிறது. மேலும், பவானி ஆற்றிலிருந்து செயல்படுத்தப்படும் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 32 ஏரிகள், 42 பஞ்சாயத்து குளங்கள் மற்றும் 970 ஊராட்சி குட்டைகள் உள்பட 1,044 குளம், குட்டைகள் தண்ணீர் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, பவானி ஆற்றில் நீரேற்று நிலையம் மூலமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது சுத்திகரிக்கப்படாத சாய கழிவுநீர் கலந்த தண்ணீர் 3 மாவட்டங்களுக்கும் பரவலாக செல்லும் அபாயம் நிலவுகிறது. ஏற்கனவே, பவானி ஆற்றின் கரையோர பகுதிகளிலிருந்து குடியிருப்பு பகுதிகளின் கழிவுகள் நேரடியாக கலந்து மாசு ஏற்படுத்தி வரும் நிலையில், சாயக்கழிவு நீரும் கலப்பது பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே, சாயப்பட்டறைகள் அதிகம் உள்ள காடையம்பட்டி, செங்காடு மற்றும் சேர்வராயன்பாளையம் பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி சாயக்கழிவுகள் வெளியேறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புற்றுநோய் பரவும் அச்சம்

ஈரோடு மாவட்டம், புற்றுநோய் பாதிப்புகள் ஏற்கனவே அதிகம் உள்ள மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க இந்நோய் அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களாக கண்டறியப்பட்ட ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவ கல்லூரி மையங்கள் உட்பட 198 சமுதாய அளவில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இம்முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பவானி அருகே ஓடையில் ஓடும் சாயக்கழிவு நீர் ஆற்றில் கலப்பது தடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Servevarayanpalayam ,Bhavani river ,Erode District ,Sengadu ,Servarayanpalayam ,Dinakaran ,
× RELATED பவானி ஆற்றில் நீர்வரத்து...