*வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு, மருதூர் ஆர்ச் பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு மருதூர் ஆர்ச் நுழைவு வாயில் அருகே விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ஜல்லிகள் பெயர்ந்து சாலை பல்லாங்குழியாக மாறி போனதால் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், கடலூர், புதுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் விதமாகவும், பல மாவட்டங்களை இணைக்கும் விதமாகவும் இச்சாலை அமைந்துள்ளது.
மேலும் தினந்தோறும் ஏராளமான பேருந்துகள், கார்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இருவழி சாலையை சீரமைக்காமல், ஒரு வழி பாதையின் வழியாக பேருந்து மற்றும் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஒரு வழி பாதையில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் கரைமேடு கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எளிதில் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை விரிவாக்க பணியை துரிதப்படுத்த வேண்டும். சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post சேத்தியாத்தோப்பு பகுதியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.