×

சுமங்கலி பிரார்த்தனையை அடிக்கடி செய்யலாமா?

– ஜெயபிரியா, சிங்கப்பெருமாள் கோவில்.

பதில்: சுமங்கலிகளை எப்பொழுது பார்த்தாலும் வணங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது. ஆனால், வீட்டில் அதை ஒரு பிரார்த்தனையாக அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முடிந்தால் வருடத்திற்கு ஒரு தரம் செய்யலாம். அப்படிச் செய்யும் போது நல்ல நாளாகப் பார்த்து செய்வது அவசியம்.

? பூஜை அறையில் எல்லா தெய்வங்களின் படங்களையும் வைக்க வேண்டுமா?
– சரஸ்வதி சுப்ரமணியம், சென்னை.

பதில்: அது பூஜை அறையின் அளவையும், உங்கள் வசதியையும் பொருத்தது. எத்தனை படங்கள் வைத்தாலும்கூட உங்களுக்கென்று பிரத்தியேகமான ஆராதனைப் படத்தை அல்லது சின்ன விக்கிரகத்தை அல்லது சாளக்கிராமத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கே உரிய திரு ஆராதனப் பெருமாள். ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கநாதனை தினசரி தரிசித்தாலும், அவருடைய தனிப்பட்ட ஆராதனைப் பெருமாளாக பேரருளாளன் (காஞ்சி வரதன்) இருந்தார் என்பார்கள். அதைப் போலவே, திருமங்கை ஆழ்வார் பற்பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், அவருடைய ஆராதனப் பெருமாள் சிந்தனைக்கினியான். இன்றைக்கும் சீர்காழிக்குப் பக்கத்திலே உள்ள திருநகரியில் திருமங்கை யாழ்வார் சந்நதியில் அவர் தனிப்பட்டு ஆராதனை செய்த சிந்தனைக் கினியானை நாமும் தரிசிக்கலாம்.

? சாஸ்திரம் சில விஷயங்களை பிறரிடம் கூறக் கூடாது என்று சொல்கிறதே,
என்னென்ன விஷயங்கள் கூறக் கூடாது?

– சௌந்தரராஜன், உடுப்பி.

பதில்: தனக்குரிய சொத்து, கடன், வயது, உபதேசமான மந்திரம், அவமானங்கள், குடும்ப ரகசியம், செய்த தானம் ஆகிய விஷயங்களை தேவையின்றி பிறரிடம் சொல்லக் கூடாது. இவைகளைச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. சில பேர் எல்லா விஷயத்தையும் பின் விளைவுகள் அறியாமல் எல்லோரிடமும் சொல்வதுண்டு. குறிப்பாக, உங்கள் வருமானத்தை பற்றிச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைத் தேடி எத்தனை பேர் கடன் கேட்க வருவார்கள் தெரியுமா?

? ஒருவர் செய்ய வேண்டிய பிரார்த்தனையை அடுத்தவர் நிறைவேற்றலாமா?
– வே.கண்ணன், ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பதில்: நிறைவேற்றுவதில் ஒன்றும் தவறு இல்லை. இயன்றளவு யார் பிரார்த்தனை அல்லது நேர்த்திக் கடன் செய்து கொண்டார்களோ, அவர்கள் செய்வதுதான் சரி. ஆனால், சில சந்தர்ப்பங்களில் அது இயலாது என்ற நிலையில், அவர்கள் சார்பில் முறையாகச் சங்கல்பம் செய்து கொண்டு, மற்றவர்களும் நிறைவேற்றலாம். நீங்கள் ஒருவரிடம் 100 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறீர்கள். அதை நீங்களே தந்தாலும் கடன் அடைபட்டுவிடும் அல்லது உங்கள் சார்பில் இன்னொருவர் கொடுத்தாலும் கடன் அடைபட்டுவிடும். இதில் மனநிலை
முக்கியம்.

? சாப்பிடுவதற்கென்று ஏதாவது நியமனங்கள் உண்டா?
– ஜெயபிரகாஷ், வந்தவாசி.

பதில்: சாத்திரத்தில் சொல்லப்படாத விஷயங்களை இல்லை. எதை, எப்படிச் செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படித்தான் சாப்பிடுவதற்கும் சில நிபந்தனைகளை (வழிமுறைகளை) சாத்திரம் விதித்திருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு விஷயம், எதையும் தனித்து சாப்பிடாதே என்று சொல்லப் பட்டிருக்கிறது. (ஏகஸ்வாது ச புஞ்ஞிக:) நான்கு பேருக்குப் பகிர்ந்து கொடுத்துச் சாப்பிடு. ஒருவரை பசியோடு வெளியே உட்கார வைத்துவிட்டு சாப்பிடாதே, நீ சாப்பிடுகின்ற அதே தரமான பொருளை மற்றவர்களுக்கும் கொடு, நடந்து கொண்டே சாப்பிடாதே, இருட்டிலே சாப்பிடாதே, ஆரோக்கியம் இல்லாத உணவுகளைச் சாப்பிடாதே, யார் எதை எப்படிக் கொடுத்தாலும் உடனே சாப்பிடாதே, தூய்மையற்ற உணவு, கெட்டுப் போன உணவு, சுவாமிக்கு நிவேதனம் செய்யாத உணவு போன்றவற்றை எடுத்துக் கொள்ளாதே. இப்படி நிறைய சொல்லி இருக்கிறது. எது காலத்திற்கும் தேசத்திற்கும் பொருத்தமானதோ, அதனை எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் 90 வயது வரைக்கும்கூட உட்கார்ந்து தரையில் பத்மாசன நிலையில் அமர்ந்து சாப்பிட்டார்கள். இன்றைக்கு 10 வயது பிள்ளைகூட டைனிங் டேபிளில் உட்கார்ந்துதான் சாப்பிடக்கூடிய கலாச்சாரம் வந்து விட்டது. அதேபோலவே, நின்று கொண்டும் நடந்து கொண்டும் சாப்பிடும் கலாச்சாரமும் வந்துவிட்டது. இவைகளை எல்லாம் சாத்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை.?

ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தால், முன்னோர்களுக்கு திதி பண்ணும் பொழுது, ஒன்றாக அமர்த்து செய்யலாமா? தனித் தனியாகச் செய்ய வேண்டுமா?

– சு.வரதராஜகுமார், ஒசூர்.

பதில்: நான்கு சகோதரர்களும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்ற பொழுது, அவர்கள் ஒன்றாகச் செய்வது தவறில்லை. ஆனால், திருமணம் நடந்து தனித் தனி குடும்பம் ஆகி விட்டால், அவர்கள் தனித் தனியாகத்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி
இருக்கின்றார்கள்.

? வீட்டின் வாயில்படியை ஒட்டி யானை படத்தை வைக்கலாமா?
– கி.சிந்தாமணி, சின்னபுரம் – ஆந்திரா

பதில்: வைக்கலாம். அஷ்ட மங்கலங்களில் ஒன்றுதானே. தவறு இல்லை.

? நாம சங்கீர்த்தனத்தில், கடைசியில் கோவிந்தா என்று சொல்கிறார்களே, ஏன் மற்ற நாமங்களைச்
சொல்வதில்லை?

– ஜெகன், திருச்சி.

பதில்: கோவிந்தா என்கிற நாமம், மிகச் சிறந்த நாமம். அதில் பத்து அவதாரங்களும் அடங்கி இருக்கின்றது. ஆண்டாள், கோவிந்த நாமம் சொன்ன பிறகுதான் கண்ணனின் கவனம் தன் மீது திரும்பியது என்கிறாள். இதற்கு முன்னால் சொன்ன நாராயண நாமம் எல்லாம் அவனுக்கு சிறு பெயராகத் தெரிந்தது என்று திருப்பாவையில் சொல்லுகின்றாள். பாண்டவ கீதையில் சுகப்பிரமம் சொல்கிறார். “சிந்தா மணிச்ச கோவிந்தோ ஹரி நாம விசிந்தயேத்’’ என்று சொல்லுகின்றார். சிந்தாமணி என்பது எதைக் கேட்டாலும் தருகின்ற ஒரு ரத்தினம். அதேபோல, கோவிந்த நாமம் எல்லாவற்றையும் விரைவாகத் தரவல்லது. அதனால்தான் நாம சங்கீர்த்தன பஜனையின் போது அவ்வப் பொழுது “சர் வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்’’ என்று சொல்லி கோவிந்தா கோவிந்தா என்று முழங்குகிறார்கள்.

? துக்கம் விசாரிக்க செல்வதில் ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா?
– விக்ரம் பிரசாத், பெங்களூர்.

பதில்: இருக்கின்றது. ஆனால், சில குடும்பங்களில் இவை வித்தியாசமாக இருக்கும். அதை அந்தந்த பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு நடக்க வேண்டும். இருந்தாலும், கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. ஒரு வீட்டில் துக்கம் கேட்கப் போகும் பொழுது நாம் கோயிலுக்கு போய் விட்டோ, வேறு சுபகாரியங்களுக்குப் போய் விட்டோ போவது நல்லதல்ல. அதைப் போலவே போகும் வழியில் தானே என்று துக்கம் விசாரித்து விட்டு சுபகாரியங்களுக்குச் செல்வதும் சரியான முறை அல்ல.

ஒரு வீட்டில் துக்கம் விசாரிக்க போகும் பொழுது, நம்மை அலங்கரித்துக் கொண்டு செல்லக் கூடாது. அதைப் போலவே இறந்து போனவர் வீட்டில் பிரேதம் இருக்கும் பொழுது செல்பவர்கள் கர்மா துவங்குவதற்கு முன்னாலேயே கிளம்பிவிட வேண்டும். கர்மா துவங்கிவிட்டால், ரதம் புறப்பட்ட பிறகுதான் கிளம்ப வேண்டும். பத்து நாட்களுக்குள் ஒன்பதாவது நாள் தவிர எந்த நாளிலும் நாள் பார்க்காமல் துக்கம் விசாரிக்கலாம் என்கின்ற அபிப்ராயம் உண்டு. ஆயினும் சிலர் வெள்ளிக் கிழமை, சனிக் கிழமை போன்ற கிழமைகளை தவிர்த்து விடுவார்கள்.

? வாமன அவதாரத்தில் மகாபலியை பாதாளத்தில் தள்ளினார். ஆனால், சுக்கிரனுடைய கண்ணை ஏன் குருடாக்கினார்?
– திவ்யா சடகோபன், உடுமலைபேட்டை.

பதில்: இந்த கதை, ஒரு சூட்சும தர்மத்தைச் சொல்லுகின்றது. மஹாபலி தானம் தந்தாலும், மகாவிஷ்ணுவுக்கு தானம் தருகின்றோம் என்கின்ற ஆணவம் மனதில் இருந்தது. அவருடைய குரு சுக்ராச்சாரியார் சொல்லியும் கேட்கவில்லை. அதனால் இரண்டு குற்றங்கள் அவனிடத்திலே சேர்ந்துவிட்டன. சுக்ராச்சாரியார் கண்ணை ஏன் குத்தினார் என்று சொன்னால், தர்மம் செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை, செய்பவனையும் தடுத்தான் என்பது ஒரு குற்றம். வந்து இருப்பது மகாவிஷ்ணு என்று தெரிந்தும் அவனிடத்திலே சரணடை என்று தன் சிஷ்யனுக்கு நல்வழி காட்ட வேண்டி இருக்க, கபட எண்ணத்தோடு வந்திருக்கிறான், தராதே என்று தவறான ஆலோசனையைக் கூறினார் அல்லவா, அதற்காகத்தான் கண் போயிற்று என்று உரையாசிரியர்கள் பதில் சொல்லி இருக்கின்றார்கள்.

? ஒருவனுடைய துக்கம் எதனால் அதிகரிக்கிறது?
– வினோத், திருமலைசமுத்திரம் – தஞ்சை.

பதில்: கவலையினால் துக்கம் அதிகரிக்கிறது. தைரியத்தினால் துக்கம் குறைகிறது. தைரியம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், துணை வலிமை வேண்டும். அந்த வலிமைக்காகத்தான் நாம் பிரார்த்தனை, கோயில் வழிபாடு என்றெல்லாம் வைத்திருக்கிறோம். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. பெரும்பாலும் நமக்கு உண்மையில் என்ன துக்கமோ அதைவிட இரண்டு மடங்கு துக்கத்தை கற்பனை செய்து கொண்டு அனுபவிக்கிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உண்மை தானே. இதைத்தான் ஒன்றை இரண்டாகுவது என்று சொல்லி வைத்தார்கள்.

? இன்றைய வாழ்வியலில் பதற்றம் இருப்பதற்கு என்ன காரணம்?
– ஸ்ரீவள்ளி, சென்னை.

பதில்: ஒரு சின்ன சம்பவம் சொன்னால் புரியும். பேருந்து நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட பஸ்ஸுக்காக சில பயணிகள் காத்திருக்கிறார்கள். அந்த பஸ் வந்து நிற்கிறது. உடனே அத்தனை பயணிகளும் அந்த பேருந்தின் கதவை நோக்கி ஓடுகிறார்கள். இதில் வயதானவர்கள், கைக் குழந்தையை வைத்திருப்பவர்கள் என எல்லோரும் அடக்கம். அந்த வழியில் ஒருவர்தான் ஏற முடியும். ஆனால் ஒரு 20, 30 பேர் சூழ்ந்து கொண்டு நான் முந்தி.. நீ முந்தி என்று வழியை அடைத்து நிற்கிறார்கள். அதே நேரத்தில் பேருந்து உள்ளே இருந்து வெளியே இறங்குபவர்கள் இறங்க முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களும் இறங்குவதற்கு அவசரப்படுகிறார்கள்.

இப்பொழுது அந்த இடத்தில் ஒரு பதற்றம் நிலவுகிறது அல்லவா. இதேதான் வாழ்வியலிலும் இருக்கிறது. உண்மையில் நீங்கள் பாருங்கள், எல்லோரும் அமர்ந்த பிறகு இன்னும் சிலர் அமர்வதற்குக் கூட அந்த பேருந்தில் இடம் இருக்கும். ஆனால். ஏன் அவசரப்படுகிறார்கள்? ஒன்று தங்களுக்கு நல்ல இடம் கிடைக்க வேண்டும். இரண்டாவதாக உட்கார இடம் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சம். ஒரு மேல் நாட்டு அறிஞர் சொல்லுகின்றார்; அவரவர்களுக்கு உள்ளது மிகச் சரியாக அவர்களிடம் வந்து சேர்ந்துவிடும். அதற்கு அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது எப்படி காத்திருப்பது என்கின்ற ஒரே விஷயத்தைதான். இது கற்றுக் கொள்ளாததால்தான் பதற்றம்.

தேஜஸ்வி

The post சுமங்கலி பிரார்த்தனையை அடிக்கடி செய்யலாமா? appeared first on Dinakaran.

Tags : Jaipriya ,Singaperumal Temple ,
× RELATED திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை...