×

கிழக்கு கடற்கரை சாலையில் குளத்தூர் அருகே ஓடை பாலத்தில் உருவான பள்ளத்தால் விபத்து அபாயம்

*விரைவில் சீரமைக்கப்படுமா?

குளத்தூர் : கிழக்கு கடற்கரை சாலையில் குளத்தூர் அருகே கல்மேடு விலக்குக்கு நடுவேயுள்ள சிறியபாலத்தின் மத்தியில் உருவான பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் விரைவில் சீரமைக்கப்படுமா? என எதிர்பார்க்கின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் இருந்து பனையூர், வேப்பலோடை, கல்மேடு விளக்கு, பட்டிணமருதூர் வழியாக தருவைகுளம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துசெல்கின்றன. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடர்ந்து இருநாட்கள் பெய்த அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் ஆறு, குளம், கண்மாய்களில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்களில் ஏற்பட்ட உடைப்பால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அத்துடன் மழை, வெள்ளத்தால் முக்கியச் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்து போனது. அந்தவகையில் குளத்தூர் வட்டாரத்தில் உள்ள சாலைகளும் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறின. ஒருசில இடங்களில் சாலை பகுதியானது சின்னாபின்னமானதால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலை உருவானது. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும் சேதம் உருவானதால் இவ்வழியாக பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மேலும் முறையான பராமரிப்பின்றி அடிக்கடி சாலையில் உருவாகும் பள்ளத்தில் வாகனங்கள் சிக்குவதும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் வேப்பலோடை, கல்மேடு விலக்குக்கு நடுவே அமைந்துள்ள சிறிய அளவில் அமைக்கப்பட்ட ஓடைப்பாலமானது முறையான பராமரிப்பின்றி பாழானது. அத்துடன் ஓடைப்பாலத்தின் மத்தியில் உருவான பள்ளத்தால் விபத்து அபாயம் நிகழ்கிறது. இங்கு நடக்கும் விபத்துகளில் சிக்குவோர் பலத்த காயமடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் பலனில்லை.

சுமார் 12 கிமீட்டருக்கு சிதிலமடைந்த கிழக்கு கடற்கரை சாலையை சிதிலமடைந்து 7 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பஞ்சர் கூட போடாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில் சிறிய பாலங்களும் பலமாக இல்லாமல் நாளுக்கு நாள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டவாறு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே இச்சாலை வழியாக பயணிக்க வேண்டியதுள்ளது.

மேலும் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் என முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலை மழை வெள்ள சேதத்திற்கு பிறகு கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் இச்சாலையையொட்டியுள்ள கிராம பொதுமக்கள் மட்டுமில்லாது, இச்சாலையில் பயணம் மேற்கொள்ளும் வெளியூர், வெளிமாநில வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வுசெய்து துரிதகதியில் சீரமைக்க முன்வருவார்களா? என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

The post கிழக்கு கடற்கரை சாலையில் குளத்தூர் அருகே ஓடை பாலத்தில் உருவான பள்ளத்தால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Kulathur ,East Coast Road ,Kalmedu ,Kulathur, ,Tuticorin district ,Dinakaran ,
× RELATED அசுர வேகத்தில் சென்றபோது கார்...