×

வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் ஓராண்டில் 45 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

*கிராமங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு

வேலூர் : தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வெளிமாநிலங்களிலிருந்து கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கள்ளச்சாராயம், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் வனத்துறையினரும் மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் கடந்த ஓராண்டில் 45 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் வேலூர், ஒடுகத்தூர், அமிர்தி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வனச்சரகர் தலைமையில் வனவர், வனகாப்பாளர்கள், வனகாவலர்கள் உள்ளனர். இவர்கள் தங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தால் உடனடியாக வனத்துறையினர் அதை அழித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தாண்டு மே வரை மொத்தம் 45 ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 891 லிட்டர் கள்ளச்சாரயமும், 2,100 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 73 பேரல்களும், 5 இருச்சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் ஓட்டியுள்ள கிராமங்களில் தொடர்ந்து கள்ளச்சாராயம் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வனத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வேலூர், அமிர்தி, ஒடுகத்தூர், பேர்ணாம்பட்டு ஆகிய வனச்சரகர்கள் அடங்கிய குழுவினரும் இடம் பெற்றுள்ளனர். மலை கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையின் சார்பில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பினை தீவிரபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் ஓராண்டில் 45 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalacharaya ,Forest Department of Vellore District ,Vellore ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,Vellore District Forest Department ,
× RELATED பச்சமலை பகுதியில் 250லி கள்ளச்சாராயம் கண்டுபிடித்து அழிப்பு