×

கலசபாக்கம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் கோடை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்

*நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் மகிழ்ச்சி

கலசபாக்கம் : கலசபாக்கம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் கோடை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பி இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பரவலாக மழை பெய்ததால் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் ஏரி பாசனம், கிணற்று பாசனம் ஆகியவற்றை முழுமையாக நம்பியுள்ளனர்.

கலசபாக்கம் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை நீர்மட்டம் கோடை மழை காரணமாக உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் ஏற்கனவே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் பண்ணை குட்டைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தது பெரும் பயனுள்ளதாக உள்ளது.

தற்போது பல்வேறு பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கோடை நடவு பணியில் கலசபாக்கம் பகுதி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2200 எக்டேர் பரப்பளவில் தற்போது கோடை நடவு பணி முடியும் தருவாயில் உள்ளது. தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எதிர்காலத்திலும் வருண பகவான் கை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயப் பணியில் தொடர்ந்து உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வேளாண்துறை அதிகாரிகள் உரிய ஆலோசனைகளை வழங்கி அதிக மகசூல் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது கோடை நடவு நடைபெற்று வருவதால் பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள் பசுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கிறது.

The post கலசபாக்கம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் கோடை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Thiruvannamalai district ,
× RELATED கலசப்பாக்கம் அருகே பரபரப்பு...