×

கள்ளக்குறிச்சி விவகாரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் நோட்டீஸ்!!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர்களுமான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்த்திகேயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், “எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலக தயாரா? எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்களை இருவரும் தொடர்புப்படுத்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திமுக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் சார்பில் வழக்கறிஞர் வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டபப்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கள்ளக்குறிச்சி விவகாரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் நோட்டீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,DMK MLAs ,BMC ,Ramadoss ,president ,Anbumani ,Chennai ,Patali Makkal Party ,DMK ,district ,Bamaka ,Ramadas ,Dinakaran ,
× RELATED பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்...