×

சாலை விபத்தில் சிக்கி பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் : அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு உத்தரவு

சென்னை : சாலை விபத்தில் சிக்கி பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மீது மது வாசனை இருந்தால் அந்த அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பல வழக்குகளின் அந்த அளவுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் அரசுக்கு சுட்டிக் காட்டி இருந்தார். இதன் காரணமாக விபத்து வழக்குகளில் காயம் அடைபவர்களுக்கு உரிய இழப்பீட்டை தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

எனவே இது தொடர்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சாலை விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இருப்பதால் ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறியவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். ரத்த மாதிரி எடுப்பது, பரிசோதனை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவு என்பதால் ரத்த மாதிரி எடுக்கும் போது, சம்மதம் தேவையா என்ற கேள்வியும் எழக்கூடாது என்றும் தமது சுற்றிக்கையில் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார்.

The post சாலை விபத்தில் சிக்கி பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் : அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...