×

தொழில்கள் தொடங்க ₹7.31 கோடி உதவி

கிருஷ்ணகிரி, ஜூன் 24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் தொழில்கள் தொடங்க ₹7.31 கோடி வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக நீதியை நிலைநாட்டும் விதமாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் 27ம் தேதியன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்கான நிலம், கட்டிடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகிவற்றின் மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியத்துடன் கூடிய கடன் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 6 சதவீத வட்டி மானியம் 10 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பட்டிலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகள் (100 சதவிகிதம் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் நபர்களுக்காக மட்டுமே) பயனடைய முடியும். திட்டத் தொகையில் 65 சதவிகிதம் வங்கிக்கடன், 35 சதவிகிதம் அரசு மானியம் (₹1.5 கோடிக்கு மிகாமல்), 10 ஆண்டுகளுக்கு மிகாமல் கடன் தொகை திருப்பி செலுத்தும் காலப்பகுதியில் இயந்திரங்கள் மற்றும் உபகரகணங்களை வாங்குவதற்கான கடனுக்கான 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவக்கமாக, மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் மூன்று மாவட்ட அளவிலான தேர்வுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, 75 கடன் விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டன. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், 2023-24ம் ஆண்டில் 20 பயனாளிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவற்றில் 19 பயனாளிகளுக்கு ஆட்டோ மொபைல் உதிரிபாகம், பல் மருத்துவமனை, பாக்கு மட்டை உற்பத்தி, பேக்கரி, போட்டோ ஸ்டுடியோ, எர்த் மூவர்ஸ், சென்டரிங் வேலை, சுற்றுலா கார், லாரி ஆகிய தொழில்கள் தொடங்க ₹7 கோடியே 31 லட்சம் வழங்கப்பட்டன. அவற்றில் பயனாளிகள் கடனுதவிக்கான மானியத்தொகை ₹2 கோடியே 26 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஓசூர் மாநகராட்சியில், வசித்து வரும் பயனாளியான பல் மருத்துவர் நிர்மலா கூறுகையில், நான் பல் அறுவை சிகிச்சை குறித்த இளங்கலை பட்டப்படிப்பு படித்து, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். எனக்கு சொந்தமாக பல் மருத்துவமனை தொடங்கி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கு என்னிடம் போதிய பண வசதி இல்லை. இந்நிலையில் தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில் தெரிந்துகொண்டு, இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தேன். எனக்கு வங்கி மூலம் ₹49 லட்சத்து 19 ஆயிரத்து 925 கடனுதவியும், அதில், ₹17 லட்சத்து 21 ஆயிரம் மானியத் தொகையும் கிடைத்தது. இத்தொகையினை வைத்து பல் மருத்துவமனை தொழிலை வெற்றிகரமான நடத்தி வருகிறேன். என்னைப் போன்ற பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கி, சமுதாயத்தில் சிறப்பாக உயர வழிவகை செய்த தமிழக முதல்வருக்கு எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதே போல் பர்கூர் தாலுகா பாலிநாயனப்பள்ளி அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பி.ஏ., பி.எட்., பட்டதாரியான சந்தோஷ்குமார், ₹10 லட்சம் கடன் பெற்று, அதில் ₹3 லட்சம் மானியத்தொகை பெற்று பாக்கு மட்டை தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார்.

The post தொழில்கள் தொடங்க ₹7.31 கோடி உதவி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Ambedkar Business ,Adi Dravidian ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தீக்குளிக்க முயன்ற தாய்- மகள் கைது