×

பெண் காவலரை தரக்குறைவாக பேசிய பாஜ நிர்வாகி கைது

திருப்பூர்: திருப்பூரில் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் பாஜ சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் பாஜவினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதோடு குமரன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சீர் செய்ய முயன்ற காவலர்களை பாஜவினர் தடுத்ததோடு காவலர்களை தரக்குறைவாக பேசி தாக்கவும் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 284 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரிக்க முற்பட்டனர். அப்போது விவரங்களை தர மறுத்து தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று திருப்பூர் வடக்கு போலீசார் செரங்காடு பகுதியில் பாஜவின் ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பனை (45) கைது செய்தனர். போராட்டத்தின்போது காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜவினர் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முன் திரண்டனர். கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை காவல்துறையினர் கூறி அவர்களை கலைந்து போக செய்தனர்.

பெண் எஸ்ஐயிடம் தகராறு பாஜ நகர தலைவர் கைது
சிவகங்கையில் டிராபிக் எஸ்ஐயிடம் தராறில் ஈடுபட்ட பாஜ நகர தலைவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை நகர டிராபிக் எஸ்ஐயாக பணிபுரிபவர் அழகுராணி. இவர் நேற்று சிவகங்கை கோட்டை முனியாண்டி கோயில் பகுதியில் பணியில் இருந்தார். அப்போது அப்பகுதியில் காரில் வந்த சிவகங்கை நகர பாஜ தலைவர் உதயாவின் காரை அழகுராணி நிறுத்தியுள்ளார். காரில் இருந்த உதயா, அழகுராணியிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அழகுராணி புகாரின்படி சிவகங்கை நகர போலீசார் விசாரணை நடத்தி, போக்குவரத்து எஸ்ஐ அழகுராணியை பணி செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவாக பேசியதாக உதயா மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். தகவலறிந்து மாவட்டத்தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் பாஜவினர் போலீஸ் ஸ்டேசன் முன் குவிந்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

The post பெண் காவலரை தரக்குறைவாக பேசிய பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BAJA ,Tiruppur ,Kumaran ,Mundinam Bajaj ,Kalalakurichi ,Bajaj ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்