×

மதுரவாயல் தனியார் ரசாயன ஆலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் சப்ளை முக்கிய குற்றவாளி சென்னையில் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய இறப்புக்கு காரணமான மெத்தனாலை சப்ளை செய்த முக்கிய குற்றவாளியை சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்து 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமானவர்களை கூண்டோடு பிடிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இதில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜா, ராமர், மெத்தனால் வியாபாரி புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ், ஷாகுல் ஹமீது (65), பண்ருட்டி சக்திவேல் (27), சூலாங்குறிச்சி கண்ணன் (30) ஆகிய 10 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் மாதேஷிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சிக்கு மெத்தனாலை மொத்தமாக சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் சிவக்குமாரிடம் (33) இருந்து வாங்கியதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சென்னை பெருநகர போலீசார் உதவியுடன் மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளி சிவக்குமாரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர். சிவக்குமார் எம்ஜிஆர்.நகரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று அதிகாலை போலீசார் சிவக்குமாரை பிடித்து சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிறகு சிவக்குமாரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மெத்தனால் மற்றும் டர்பன்டைன் எண்ணெயை சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை கைது செய்தனர். தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தெரிந்து சிவக்குமார் மெத்தனாலை விற்பனை செய்தாரா அல்லது தன்னிச்சையாக விற்பனை செய்தாரா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் சிபிசிஐடி போலீசார், சிவக்குமார் பணியாற்றி வரும் வடபெரும்பாக்கத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு விசாரணை நடத்த நேரில் சென்றனர். ஆனால் ரசாயன தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்ததால், அதன் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த தெய்வீகன் (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், பேரல்களில் கொண்டு வரப்பட்ட மெத்தனாலை சிறிய சிறிய கேன்களில் மாற்றுவதற்காக இடவசதி செய்து கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனாக தொழிலில் இறங்கி பல கோடி சொத்து வாங்கிய மாதேஷ்
விஷ சாராய சாவுக்கு காரணமான மெத்தனால் வியாபாரி மாதேஷ் (19) கடந்த இரண்டு வருட காலத்தில் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்துள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த மாதம் பண்ருட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றை குத்தகை அடிப்படையில் ₹50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள மாதேஷ், திருவண்ணாமலை பகுதியில் ₹4.50 கோடிக்கு நிலம் வாங்க பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுவனாக இருக்கும் போது தந்தையை இழந்த மாதேஷ், குறுகிய காலத்தில் சாராய விற்பனையில் இறங்கி சொத்து குவித்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கி உள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன், டிடிவி ஆறுதல்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘இந்த சம்பவம் அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ நாம் பார்ப்பதை விட நம் எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. சாலை விபத்துகள் நடப்பது என்பதற்காக போக்குவரத்தை நிறுத்த முடியாது.

அதுபோல் குடிப்பவர்களிடம் குடிக்காதே என அறிவுரை கூறுவதை விட அளவோடு குடியுங்கள் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு இந்த சம்பவத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறது. இதற்கு மேல் விமர்சனங்கள் எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருணாபுரம் பகுதிக்கு நேற்று நேரில் சென்று, பிரேத பரிசோதனை முடிந்து வந்த உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் சிபிஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மெத்தனால் வியாபாரிக்கு உதவி; கிரிவலம் சென்று கொண்டிருந்த சிப்ஸ் கடைக்காரரை தூக்கிய போலீஸ்
மெத்தனால் வியாபாரி மாதேஷுக்கு மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி எண் கொடுத்து போலி பில் தயாரிக்க உதவியது பண்ருட்டி ஓட்டல் அதிபரும், சிப்ஸ் கடை உரிமையாளருமான சக்திவேல் என சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை விசாரித்தனர். அப்போது அவர், திருவண்ணாமலை கிரிவலத்தில் சென்று கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, இரவோடு இரவாக திருவண்ணாமலை சென்று சக்திவேலை பிடித்து கள்ளக்குறிச்சி கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சக்திவேல் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு: சென்னையில் இருந்து கொண்டு வரும் மெத்தனால் விருத்தாச்சலம் செல்லும் வழியில் பண்ருட்டியில் இறக்கி வேறு வண்டியில் ஏற்றி செல்வோம். என்னுடைய ஓட்டலுக்கு சாப்பிட வந்த மாதேஷ் எனக்கு பழக்கமானான். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் மாதேசுக்கு பண்ருட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றை குத்தகை அடிப்படையில் ₹50 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். மேலும் ₹4.50 கோடி செலவில் நிலம் வாங்குவதற்காக பேசி முடித்து பணம் கொடுத்தோம். இந்த வகையில் என்னிடம் நண்பரான மாதேஷ், தான் கெமிக்கல் வியாபாரம் செய்து வருவதாகவும் அந்த வியாபாரத்திற்கு எனக்கு ஜிஎஸ்டி தேவை என்று கேட்டு எனது ஜிஎஸ்டி நம்பரை என்னிடம் வாங்கி பயன்படுத்தி கொண்டான். இவ்வாறு சக்திவேல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தியதில் இதுவரை 55 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கருணாபுரம் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (47), மதன் (46), சங்கராபுரத்தை சேர்ந்த சாமுண்டி (70) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவும், நேற்றும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 110 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 12 பேர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என 156 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விஷ சாராயத்தால் உயிரிழப்பா? சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை
கள்ளக்குறிச்சி அருகில் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் (45), இளையராஜா (35) ஆகிய இருவரும் விஷ சாராயம் குடித்து வீட்டிலேயே இறந்த நிலையில் ஜெயமுருகன் உடல் புதைக்கப்பட்டது, இளையராஜா உடல் தகனம் செய்யப்பட்டது. இவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ₹10 லட்சம் நிவாரண உதவி கேட்டு உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து நேற்று ஜெயமுருகன் உடலை தோண்டி எடுத்து அங்கேயே, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப்பேராசிரியர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் உடற்கூறாய்வு செய்தனர். உடலின் முக்கிய பாகங்களை சோதனைக்கு எடுத்து சென்றனர். பின்னர் சடலத்தை மீண்டும் அதே குழியில் புதைத்தனர்.

போலீசுக்கு பயந்து ஓடும் சாராய வியாபாரிகள்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்ததையடுத்து சாராயம் விற்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துணை நிற்கும் அரசியல் பிரமுகர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டதால் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்றும் சாராய வியாபாரிகள் சீதாராமன், ரவிச்சந்திரன், வசந்தா, சத்தியா, பாக்கியலட்சுமி, வனமயில் ஆகிய 6 சாராய வியாபாரிகளை கைது செய்தனர். இதனால் சாராய வியாபாரிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சாராய வியாபாரிகள், போலீசுக்கு பயந்து வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

The post மதுரவாயல் தனியார் ரசாயன ஆலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் சப்ளை முக்கிய குற்றவாளி சென்னையில் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,CBCID ,Kalakurichi ,Karunapuram, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில்...