×

வாலிபருக்கு பாலியல் தொல்லை; பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணன் சூரஜ் கைது: சிஐடி விசாரணைக்கு கர்நாடகா அரசு உத்தரவு

பெங்களூரு: மஜதவை சேர்ந்த வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவகவுடாவின் பேரனும் மஜத எம்.எல்.சியுமான சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பியும் தேவகவுடாவின் பேரனும், ஹொலெநரசிபுரா எம்.எல்.ஏ ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா பல நூறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்கள் வைரலாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், பிரஜ்வலால் பலாத்காரம் செய்யப்பட்ட அவரது வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரில் பிரஜ்வல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த பணிப்பெண் கடத்தப்பட்ட வழக்கில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா மற்றும் தாய் பவானி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்.எல்.சியுமான சூரஜ் ரேவண்ணா(36) மீது மஜதவை சேர்ந்த 27 வயது நபர் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா நேற்று காலை கைது செய்யப்பட்டார். மஜதவை சேர்ந்த அந்த 27 வயது தொண்டர் போலீசில் அளித்த புகாரில், சூரஜ் ரேவண்ணா தன்னை கடந்த ஜூன் 16ம் தேதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் செய்திருந்தார். இதற்கிடையே சூரஜ் மீது வாலிபர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்த போலீசார், பின்னர் ஹாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தனர். சூரஜ் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சூரஜ் ரேவண்ணா மீதான இயற்கைக்கு முரணான உடலுறவு வழக்கு விசாரணை சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சூரஜின் நெருங்கிய நண்பரான சிவகுமார் என்பவர், போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், தன்னிடம் பழகிய நபர் ஒருவர் சூரஜிடம் வேலை பார்த்ததாகவும், பொய் பாலியல் புகார் கூறி ₹5 கோடி கேட்டு மிரட்டியதாகவும், அதை தர மறுத்ததால் பின்னர் ₹2 கோடி கேட்டு மிரட்டியதாகவும், அதற்கும் உடன்படாததால் பொய் பாலியல் புகார் கொடுத்ததாகவும் சிவகுமார் புகார் அளித்திருந்தார்.

நீதித்துறை மீது நம்பிக்கை
இதுதொடர்பாக பேசிய சூரஜின் தந்தையும், ஹொலெநரசிபுரா தொகுதி எம்.எல்.ஏவுமான ரேவண்ணா, நான் எதற்கும் ரியாக்ட் செய்ய விரும்பவில்லை. கடவுள் மீதும், நீதித்துறை மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற சதிகளுக்கெல்லாம் பயப்படும் நபர் நான் அல்ல. காலம் தான் பதில். இது யாருடைய சதி என்று தெரியவில்லை. இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நீதித்துறை இருக்கிறது. நேரம் வரும்போது நான் பதில் சொல்கிறேன் என்று கூறினார்.

The post வாலிபருக்கு பாலியல் தொல்லை; பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணன் சூரஜ் கைது: சிஐடி விசாரணைக்கு கர்நாடகா அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Brajwal Revanna ,Sooraj ,Karnataka govt ,CIT ,Bengaluru ,Deve Gowda ,Majda ,MLC ,Suraj Revanna ,Hassan ,Constituency ,Holenarasipura ,MLA ,Revanna ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மனு தள்ளுபடி