×

ரூ.1.5 கோடி செலவில் கட்டப்படும் சிறிய பாலம் பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரேவாரத்தில் 3வது சம்பவம் n பொதுமக்கள் அதிர்ச்சி

மோதிஹாரி: பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பால விபத்துகளுக்கு மிகவும் பெயர் பெற்ற மாநிலமாக பீகார் உருவாகி வருகிறது. பீகாரின் அராரியா மாவட்டத்தின் குர்சா காந்தா – சிக்டி பகுதிகளை இணைக்கும் விதமாக பராரிய கிராமத்தில் பக்ரா ஆற்றின் மீது ரூ.12 கோடி செலவில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை அணுகுவதற்கான சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட இருந்தது. இந்த பாலத்தின் ஒருபகுதி கடந்த 18ம் தேதி இடிந்து விழுந்தது.

இதன் தொடர்ச்சியாக சிவான் மாவட்டம் தரவுண்டா தொகுதியின் படேதா கிராமத்தையும், மகாராஜ்கஞ்ச் தொகுதியின் கரோலி கிராமத்தையும் இணைக்கும் விதமாக ராம்கர் ஆற்றின் மீது சிறிய பாலம் கட்டப்பட்டிருந்தது. 30 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றும் ஒரு பால விபத்து அரங்கேறி உள்ளது.
கிழக்கு பூர்வி சம்பாரன் மாவட்டம் மோதிஹாரியின் கோரசஹான் பேரவை தொகுதியில் உள்ள அம்பா கிராமத்தை பிற பகுதிகளுடன் இணைக்கும் விதமாக கால்வாய் மீது 16 மீட்டர் நீளமுள்ள பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. மாநில ஊரக பணித்துறையால் ரூ.1.5 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த சிறிய பாலம் முழுவதும் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்து குறித்து மாநில ஊரக பணித்துறை தலைமை செயலாளர் தீபக் சிங் கூறியதாவது, “சம்பவ இடத்தில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். ஒரேவாரத்தில் 3வதாக நடந்துள்ள பால விபத்து ஆளும் மாநில அரசு மேற்கொள்ளும் பொதுப்பணிகளின் தரம் குறித்து சந்தேகத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

The post ரூ.1.5 கோடி செலவில் கட்டப்படும் சிறிய பாலம் பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரேவாரத்தில் 3வது சம்பவம் n பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bihar ,Motihari ,Janata Dal ,BJP ,Nitish Kumar ,Kursa Kanda ,Chikti ,Araria district ,Bihar… ,
× RELATED மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில்...