×

வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம்: ஒன்றிய இணை அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை அருகே உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மெக்வால், எல். முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை சார்பில் குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று சென்னை அருகே வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.

இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிஷ் ஜிதேந்திர தேசாய், தெலங்கானா தலைமை நீதிபதி அலோக் ஆரதே, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கங்கள் குறித்து பேசிய மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைச் செயலாளர் ராஜிவ் மணி, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பேசுகையில், ‘‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நான்கு ஆண்டு ஆய்வுகள், விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டவை. அடுத்த 5 ஆண்டுகளுக்குள், இந்த மூன்று சட்டங்களும் நவீன குற்றவியல் நீதி அமைப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்’’ என கூறினார்.

தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் பேசுகையில், ‘‘இந்த மூன்று புதிய சட்டங்களும் சரியான திசையில் செல்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு அதன் சொந்த நீதி முறைமைக்கு மாறியுள்ளது. காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் முக்கிய முன்முயற்சி இது’’ என்று தெரிவித்தார்.

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிஷ் ஜிதேந்திர தேசாய், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரும் பேசினார். இக் கருத்தரங்கில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 5 உயர் நீதிமன்ற நீதிபதிகள், கீழமை நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சட்டப் பல்கலைக் கழகங்கள் மற்றும் பல்வேறு சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் தொடக்க அமர்வைத் தொடர்ந்து மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மூன்று தொழில் நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ்குமார், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம்: ஒன்றிய இணை அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : V.I.T. Seminar ,Union ,Ministers ,CHENNAI ,Union Government ,VIT ,University ,Union Ministers of State ,Arjun Ram Meghwal ,L. Murugan ,laws ,Dinakaran ,
× RELATED திருத்தணி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி...