×

திருவாரூர் அருகே வீடு கட்டும்போது 5 கிலோ எடை ஐம்பொன் விஷ்ணு சிலை கண்டெடுப்பு: 12ம் நூற்றாண்டை சேர்ந்தது

மன்னார்குடி: திருவாரூர் அருகே வீடு கட்டும் பணியின் போது, 12ம் நூற்றாண்டை சேர்ந்த 5 கிலோ எடையுடைய ஐம்பொன் விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்குமணிகுளம் அருகில் மதுக்கூர்சாலையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் பழமையான கோபியர் கோபிரளயம் மகரிஷி கோயில் உள்ளது. தொன்மையான இந்த கோயிலுக்கு அருகில் உள்ள மாடர்ன் நகரில் சஞ்சீவி தெருவை சேர்ந்தவர் சிவா (எ) நடராஜன் (52) தனது காலிமனையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தொழிலாளர்கள் நேற்று மாலை பள்ளம் தோண்டியபோது உலோகம் சத்தம் கேட்கவே கவனமாக தோண்டி பார்த்ததில் திருவாச்சியுடன் கூடிய உலோக சிலை கிடைத்தது.

தகவலறிந்து போலீசாரும், வருவாய் துறையினரும் வந்து சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 கிலோ எடையுள்ள இந்த உலோக சிலை ஐம்பொன்னாலான பழமையான விஷ்ணு சிலை என தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல தொல்லியல் ஆலோசகர் சேகர் கூறும்போது, கலைநயமிக்க திருவாச்சியுடன் கூடிய இந்த சிலை 12ம் நூற்றாண்டு பிற்கால சோழர் ஆட்சிக் காலத்தை சேர்ந்த தொன்மையான விஷ்ணு சிலை.

சிலை கிடைத்த பகுதி அருகே பழமையான பெருமாள் கோயில் உள்ளது குறிப்பிடத் தக்கது என்றார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமான ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு திருப்பணிகளுக்காக விரைவில் பாலாலயம் நடைபெற உள்ள நிலையில் அதன் உப கோயிலான கோபியர் கோபிரளயம் மகரிஷி கோயில் அருகே ஐம்பொன்னாலான பழமையான பெருமாள் சிலை கிடைத்திருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவாரூர் அருகே வீடு கட்டும்போது 5 கிலோ எடை ஐம்பொன் விஷ்ணு சிலை கண்டெடுப்பு: 12ம் நூற்றாண்டை சேர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Aimpon Vishnu ,Thiruvarur ,Mannargudi ,Tiruvarur ,Aimbon Vishnu ,Hindu Religious Charitable Department ,Madhukursalai ,Mannargudi Rukmanikulam, Thiruvarur district ,
× RELATED திருவாரூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்