×

ஆப்கானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: கம்மின்ஸ் ஹாட்ரிக், மேக்ஸ்வெல் அதிரடி வீண்

கிங்ஸ்டவுன்: ஆப்கானிஸ்தான் அணியுடனான உலக கோப்பை டி20 சூப்பர்-8 சுற்று முதல் பிரிவு ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 21 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. செயின்ட் வின்சென்ட், அர்னாஸ் வேல் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் இணைந்து ஆப்கானிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 15.5 ஓவரில் 118 ரன் சேர்த்தனர்.

குர்பாஸ் 60 ரன் (49 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் வார்னர் வசம் பிடிபட்டார். அஸ்மதுலா 2, இப்ராகிம் ஸத்ரன் 51 ரன் (48 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆடம் ஸம்பா சுழலில் பெவிலியன் திரும்பினர். கம்மின்ஸ் வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் ரஷித் கான் 2, 20வது ஓவரின் முதல் 2 பந்தில் கரிம் ஜனத் 13, குல்பாதின் நயிப் (0) விக்கெட்டை பறிகொடுக்க, நடப்பு தொடரில் தொடர்ந்து 2வது முறையாக கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார்.

ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது. முகமது நபி 10 ரன், நங்கேயலியா கரோடே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 3, ஸம்பா 2, ஸ்டாய்னிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 5.1 ஓவரில் 32 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. ஹெட் 0, கேப்டன் மார்ஷ் 12, வார்னர் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அரை சதம் அடிக்க, மறு முனையில் ஸ்டாய்னிஸ் 11, டிம் டேவிட் 2 ரன் எடுத்து குல்பாதின் நயிப் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மேக்ஸ்வெல் 59 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி குல்பாதின் பந்துவீச்சில் நூர் அகமது வசம் பிடிபட்டார். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுக்க, ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 127 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மேக்ஸ்வெல்லுக்குப் பிறகு உதிரியாகக் கிடைத்த 16 ரன் தான் 2வது அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஷ் ஹேசல்வுட் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கான் பந்துவீச்சில் குல்பாதின் நயிப் 4 ஓவரில் 20 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். நவீன் உல் ஹக் 3, அஸ்மதுல்லா, முகமது நபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post ஆப்கானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: கம்மின்ஸ் ஹாட்ரிக், மேக்ஸ்வெல் அதிரடி வீண் appeared first on Dinakaran.

Tags : Australia ,Afghanistan ,Cummins ,Maxwell ,Kingstown ,World Cup T20 Super-8 round ,Arnaz Vale Arena ,St. Vincent ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்;...