×

6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி; தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: மந்தனா, ஹர்மன்பிரீத் அசத்தல்

பெங்களூரு: தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனைகள் கேப்டன் லாரா வுல்வார்ட் – டஸ்மின் பிரிட்ஸ் முதல் விக்கெட்டுக்கு 19.5 ஓவரில் 102 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். வுல்வார்ட் 61 ரன் (57 பந்து, 7 பவுண்டரி), பிரிட்ஸ் 38 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

ஓரளவு தாக்குப்பிடித்த டி கிளெர்க், டி ரிட்டர்* தலா 26 ரன், நாண்டுமிசே ஷன்கேஸ் 16 ரன் எடுக்க, தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்தது. இந்திய பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட், ஷ்ரேயங்கா, பூஜா வஸ்த்ராகர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. மந்தனா – ஷபாலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது. ஷபாலி 25, பிரியா புனியா 28 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மந்தனா 90 ரன் (83 பந்து, 11 பவுண்டரி) விளாசி அவுட்டானார். பொறுப்புடன் விளையாடிய ஹர்மன்பிரீத் 42 ரன் (48 பந்து, 2 பவுண்டரி) விளாசி, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். இந்தியா 40.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது.

ஜெமிமா 19 ரன், ரிச்சா கோஷ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா. ஒருநாள் தொடரில் இந்திய அணி 2019க்கு பிறகு ஒயிட்வாஷ் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தீப்தி ஷர்மா ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருது பெற்றார் (10-0-27-2). இந்த தொடரின் 3 இன்னிங்சில் 117, 136, 90 என மொத்தம் 343 ரன் குவித்த ஸ்மிரிதி மந்தனா தொடர் நாயகி விருதை தட்டிச் சென்றார். அடுத்து இரு அணிகளும் சென்னையில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளன. டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஜூன் 28ம் தேதி தொடங்குகிறது.

The post 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி; தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: மந்தனா, ஹர்மன்பிரீத் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : HATRICK ,WHITEWASH ,SOUTH AFRICA ,INDIA ,MANTANA ,HARMANPREET ,SHAKING ,Bangalore ,women's team ,M. ,Sinnasamy Stadium ,South ,Mandana ,Achatal ,Dinakaran ,
× RELATED சென்னையில் இன்று முதல் இந்தியா-தெ.ஆ...