×

ரூ.50 கோடி கேட்டு ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி பாஜ மாவட்ட தலைவர்கள் பொதுச்செயலாளர் நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

மயிலாடுதுறை: ரூ.50 கோடி கேட்டு ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் மற்றும் பாஜ பிரமுகரை கொல்ல முயற்சி வழக்குகளில் தொடர்புடைய மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளரை நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆடியோ, வீடியோ வெளியிடுவதாக கூறி ரூ.50 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறை போலீசார் பாஜ நிர்வாகிகள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜ பிரமுகர்களான ஆடுதுறை வினோத், சம்பா கட்டளை விக்னேஷ் மற்றும் செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம், ஆதீன நேர்முக உதவியாளர் செந்தில், செய்யாறு வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகியோரை தேடி வந்தனர். முன்ஜாமீன் கேட்டு பாஜ மாவட்டத் தலைவர் அகோரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அகோரம் மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கடந்த மார்ச் 15ம் தேதி மும்பை சென்று அகோரத்தை கைது செய்தனர்.

மறுநாள் அவரை மயிலாடுதுறை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில் அகோரத்துக்கும் மயிலாடுதுறை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து திருச்சி சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.

அதேபோல், தேர்தல் செலவுக்கு தலைமையால் கொடுக்கப்பட்ட பணத்தில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் குடவாசலை சேர்ந்த பாஜ பிரமுகரை கடந்த மாதம் 8ம் தேதி கொல்ல முயன்ற வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் எஸ்.பாஸ்கர், பொது செயலாளர் சி.செந்திலரசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாஸ்கர் புதுக்கோட்டை சிறையிலும், செந்திலரசன் நாகை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த 3 பேரும் பாஜவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் எஸ்.பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம், திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் சி.செந்திலரசன் ஆகியோர் வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.50 கோடி கேட்டு ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி பாஜ மாவட்ட தலைவர்கள் பொதுச்செயலாளர் நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP District ,Annamalai ,Mayiladuthurai ,Tiruvarur ,BJP ,Adeena ,Dharumapuram ,Adeenam ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்...