×

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி அண்ணாமலை மீது சந்தேகம்: ஆர்.எஸ்.பாரதி பகீர் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய பலியில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக அண்ணாமலை போன்றவர்கள் சிபிஐ விசாரணை கேட்பதற்கான நோக்கம் தெரிகிறது.

அவர்களது ஆட்கள் யாராவது இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? அவர்களை காப்பாற்றுவதற்காக சிபிஐ விசாரணையை கேட்கிறாரா?. ஒன்றிய அரசு நினைத்தால் ஒருவர் மீது ஈடி, சிபிஐ சோதனை, அவர்கள் பாஜவில் இணைந்தால் சோதனை நிறுத்தம் என செயல்பட்டு வருகிறது. சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடைபெற்ற வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடியும் விசாரணை ஆணையமும் விசாரிக்கிற போது நியாயமாக இருக்கும்.

யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எந்த முதலமைச்சரும் சட்டமன்றத்தில் சொல்லாத வகையில் எதிர்க்கட்சியினரே வாருங்கள் பதில் கூறுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்தார். ஆனால் வரவில்லை. நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்து விட்டது. இதற்கு பிறகு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் நிச்சயம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தெரியவரும்.

எதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும்? ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கும்பகோணம் மகாமகத்தில் 100 பேர் உயிரிழந்தனர். ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? அதிமுக ஆட்சியில் சாராயம் குடித்து உயிரிழப்பின்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? சும்மா அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம், மெத்தனால் வந்தது பாண்டிச்சேரியில் இருந்துதான். அங்கு பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது.

அதனால் பாண்டிச்சேரி முதலமைச்சரை அண்ணாமலை ராஜினாமா செய்ய சொல்வாரா? குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது, 100க்கணக்கானோர் சாராயம் குடித்து இறந்தனர். அப்போது மோடி ராஜினாமா செய்தாரா? பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக அண்ணாமலை போன்றவர்கள் செய்த சதியாக இருக்கலாம் என்று என்னை போன்றவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்தவர்களை கூண்டோடு பணி இடை நீக்கம் செய்துள்ளார். இதற்கு முன்பு இதுபோல் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடைபெறுகிறது என்றால் இதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா? யாரேனும் திட்டமிட்டு இந்த செயலை செய்தார்களா? இது சதியா என்பது விசாரணையில் தான் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சிபிஐ விசாரணை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை
ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், ‘சிபிஐ விசாரணை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை, அவர் முதலமைச்சராக இருந்தபோது செய்த ஊழலுக்காக வழக்கு தொடரப்பட்டபோது நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்கு ஓடோடி சென்று தடை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி.

சிபிஐயை விசாரிக்க சொல்வது இந்த வழக்கை தாமதப்படுத்தி வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை மறைப்பதற்கான முயற்சி என்பதுதான் எனது கருத்து. சிபிஐ வழக்கை உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், 2016ல் 570 கோடி ரூபாய் கன்டெய்னர் பணம் தொடர்பான வழக்கில் இன்று வரை சிபிஐ விசாரணையில் அந்த பணம் யாருக்கு சொந்தம் என்று கூறவில்லை. அந்த வழக்கை முடிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி அண்ணாமலை மீது சந்தேகம்: ஆர்.எஸ்.பாரதி பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : R. S. Bharti Bakir ,Pudukkottai ,Dimuka Organization ,R. S. Bharati ,R. S. ,Bharati ,Annamalai ,R. S. Bharati Bakir ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளி...