×

முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மருத்துவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு: டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மருத்துவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். முது நிலை நீட் தேர்வு ரத்து, நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நேற்று நடைபெற இருந்த முது நிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.  இது உச்சப்பட்ச அராஜகப் போக்கு, அடாவடித்தனம், சர்வாதிகாரச் செயல்பாடாகும். நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், பிரச்சினையை திசை திருப்பவும், என் டி ஏ ஒரு நேர்மையான அமைப்பு என்ற பொய்யானத் தோற்றத்தை உருவாக்கவுமே, இந்த தேர்வை கடைசி நேரத்தில் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.

இது கடும் கண்டனத்திற்குரியது. சில மருத்துவர்கள் பணிகளை முழுமையாக நிறுத்திவிட்டு முது நிலை நீட்தேர்வுக்கு தயாராக இருந்தனர். அத்துடம் சில மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வு எழுத வந்து இருப்பார்கள், தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் மருத்துவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளன. இந்த பொருளாதார இழப்புகளை ஒன்றிய அரசு ஈடுகட்ட வேண்டும்.

மேலும் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ,ஒரே நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு புகுத்தியுள்ளது. இது பல்வேறு முறைகேடுகளுக்கும், வினாத்தாள் வெளியாவதற்கும், ஆள் மாறாட்டங்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறது . அதுமட்டுமன்றி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும் தானே கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்திட பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முயல்கிறது.

அதற்கான சுற்றறிக்கையை கடந்த ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்டது. இதன் மூலம் நாடு முழுவதும், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களையும், தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர ஒன்றிய அரசு முயல்கிறது. இதன் மூலமாகவும், தேசிய கல்வி கொள்கை மூலமாகவும் பாடத்திட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி மாற்றம் செய்ய ஒன்றிய பாஜக அரசு முயல்கிறது.

இது மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை முற்றிலுமாக பறிக்கும் செயலாகும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை ,முதுநிலை ,உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, அந்தந்த மாநிலங்களே தேர்வுகளை நடத்தி ,மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மருத்துவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு: டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Dr. ,G. R. Ravindranath ,General Secretary ,Doctors' Association ,Chennai ,Doctors Association ,Dinakaran ,
× RELATED ங போல் வளை