×

நீட் தேர்வில் முறைகேடு சிபிஐ விசாரணை தொடங்கியது: பாட்னா, கோத்ராவுக்கு தனிப்படை விரைந்தது

புதுடெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. வினாத்தாள் கசிந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பீகாரின் பாட்னா மற்றும் குஜராத்தின் கோத்ரா பகுதிகளுக்கு சிறப்பு தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. இதில் வழக்கத்திற்கு மாறாக 67 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றனர்.

மேலும், அரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் முழு மதிப்பெண் பெற்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தேர்வுக்கு முன்பாகவே பீகாரின் பாட்னா மற்றும் குஜராத்தின் கோத்ரா பகுதிகளில் நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பாட்னாவில் 13 பேரை பீகார் போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், இதில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தினர்.

முறைகேடுகளை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்த வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில், முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்த ஒன்றிய அரசு, சில இடங்களில் தனிப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக பின்னர் ஒப்புக் கொண்டது. ஆனாலும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்த ஒன்றிய கல்வி அமைச்சகம், நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) மேம்படுத்த 7 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது.

இறுதியில், கடும் எதிர்ப்புகளுக்கு பணிந்த அரசு, என்டிஏ தலைவர் சுபோத் சிங்கை அதிரடியாக நீக்கி, நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், ரேங்க் பட்டியலில் மோசடி என அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நீட் விவகாரத்தில் சிபிஐ நேற்று தனது முதல் வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

முறைகேடுகள் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஐபிசி 120பி (குற்றச்சதி), 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சிபிஐ சிறப்பு தனிப்படையினர் பாட்னா மற்றும் கோத்ராவிற்கு நேற்று அனுப்பப்பட்டனர். ஏற்கனவே, சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நீட் முறைகேடுகள் குறித்தும் விசாரணையை தொடங்கி உள்ளது.

நீட் முறைகேடு, நெட் தேர்வு ரத்து ஆகியவற்றை தொடர்ந்து நேற்று முன்தினம் நீட் முதுகலை நுழைவுத்தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்ததா என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்ய ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள 7 நபர் உயர் மட்டக் குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.

* 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
நீட் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கடந்த மே 5ம் தேதி பீகாரில் தேர்வு எழுதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை நேற்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கு முன் முறைகேடு புகார்களுக்காக 63 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தின் கோத்ராவில் நீட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் 30 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கல்வியை மையமாக்குதல், வணிகமயமாக்குதல் மற்றும் வகுப்புவாதமாக்குதலின் விளைவுதான் நீட் தேர்வு ஊழல். இந்த ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணை என்பது வியாபம் ஊழல் போலவே மூடிமறைக்கும் அணுகுமுறை. இதற்கு ஒன்றிய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

* ஜார்க்கண்ட் பள்ளியில் கசிந்த நீட் வினாத்தாள்
பீகாரின் பாட்னாவில் நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பீகார் எல்லையை ஒட்டி உள்ள ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாத்தில் உள்ள ஓயாசிஸ் பள்ளியில் இருந்துதான் அந்த வினாத்தாள் கசிந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு மையமாக செயல்பட்ட இப்பள்ளிக்கு வந்த வினாத்தாள் பெட்டி சேதப்படுத்தப்பட்டு அதில் இருந்து வினாத்தாள் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உபி மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ரவி அத்ரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே நேற்று முன்தினம் ஜார்க்கண்ட்டில் நீட் விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு பீகார் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

* நீட் மறுதேர்வில் 750 பேர் ஆப்சென்ட்
கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் நுழைவுத்தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில், 750 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘‘சண்டிகர், சட்டீஸ்கர், குஜராத், மேகாலயா, அரியானா ஆகிய மாநிலங்களில் 7 மையங்களில் மறுதேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 1,563 மாணவர்கள் மறுதேர்வு எழுத தகுதி பெற்றிருந்த நிலையில் 813 பேர் (52 சதவீதம்) மறு தேர்வில் பங்கேற்றனர். 750 பேர் (48 சதவீதம்) தேர்வெழுத வரவில்லை. சண்டிகரில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தகுதி பெற்ற 2 மாணவர்களும் தேர்வெழுத வரவில்லை. சட்டீஸ்கரில் 602 பேரில் 311 பேர் வரவில்லை. அரியானாவில் 494 பேரில் 207 பேரும், மேகாலயாவில் 464 பேரில் 230 பேரும் ஆப்சென்ட் ஆகினர். குஜராத்தில் ஒரு மாணவர் மறுதேர்வு எழுதினார்’’ என கூறப்பட்டுள்ளது.

* சிபிஐ அதிகாரிகளை தாக்கிய பீகார் கிராம மக்கள்
யுஜிசி நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் பீகாரின் நவாடா மாவட்டம் காசியாதின் கிராமத்தின் வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை ஏமாற்று கும்பல் என கருதிய கிராமமக்கள் வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த விவகாரம் தொடர்பாக பீகார் போலீசார் 4 பேரை நேற்று கைது செய்துள்ளனர்.

The post நீட் தேர்வில் முறைகேடு சிபிஐ விசாரணை தொடங்கியது: பாட்னா, கோத்ராவுக்கு தனிப்படை விரைந்தது appeared first on Dinakaran.

Tags : CBI ,Patna, Godhra ,New Delhi ,Patna ,Bihar ,Godhra ,Gujarat ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் தடைக்கு...