×

எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள நிலையில் மக்களவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது: முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு

டெல்லி: தேர்தலில் எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள நிலையில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் இரு நாட்களில் புதிய எம்பிக்கள் பதவியேற்கவுள்ளனர். 26ம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது. 27ம் தேதி ஜனாதிபதி உரையாற்றுகிறார். நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு 240 இடங்கள் கிடைத்தாலும் கூட தனிப்பெரும்பான்மை (272) பலம் கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி கடந்த 9ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் தேர்தல் முடிந்து மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (ஜூன் 24) தொடங்கி வரும் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் மாநிலங்களவை வரும் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. வரும் 27ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

நாளையும், நாளை மறுநாளும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு மக்களவை இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின் வரும் 26ம் தேதி மக்களவை தலைவர் (சபாநாயகர்) தேர்தல் நடைபெறவுள்ளது. தற்காலிக மக்களவை சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசுக்கும் காங்கிரசுக்கும் மோதல் இருந்து வருகிறது. அதனால் புதிய எம்பிக்களுக்கு பதவி ஏற்பு செய்து வைப்பதற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட குழுவில் சேராமல் புறக்கணிக்க எம்பிக்கள் குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே, புதிய மக்களவை தலைவராக யாரை தேர்வு செய்வார்கள்? என்ற கேள்வியும் நீடித்து வருகிறது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே மக்களவைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பாஜக விட்டுக் கொடுக்காது என்றே கூறுகின்றனர். எனவே கடந்த முறை மக்களவை தலைவராக இருந்த ஓம் பிர்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா? அல்லது பாஜக மூத்த தலைவர்கள் டி.புரந்தேஸ்வரி, ராதா மோகன் சிங் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்ற கேள்வியும் உள்ளது. கடந்த 2014, 2019 தேர்தல்களைப் போல் அல்லாமல், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளதால், ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் களமிறக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிக்கு விட்டுக் கொடுத்தால், கருத்தொற்றுமை அடிப்படையில் மக்களவைத் தலைவரை தேர்வு செய்து கொள்ளலாம் என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் சபாநாயகர், துணை சபாநாயகர் விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளதால், தேர்தல் முறையில் அவர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரின் உரையை தொடர்ந்து, அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பிரதமரின் பதில் உரையும் வரும் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும். நீட், நெட் தேர்வு முறைகேடு, ஜூலை 1ம் தேதி அமலுக்கு வரவுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள், விலைவாசி உயர்வு, ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

 

The post எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள நிலையில் மக்களவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது: முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : People's Rally ,MBIs ,Delhi ,18th Lok Sabha ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டில் 150 பேரை இடைநீக்கியது போன்று...