×

‘‘உயிர் உள்ளவரை இனி சாராய ஆசை இருக்காது”: உயிர் பிழைத்த தொழிலாளிகள் கண்ணீர் பேட்டி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மரணத்தை தொட்டு உயிர் பிழைத்துள்ள தொழிலாளிகள் நேற்றிரவு கண்ணீர்மல்க பேட்டி அளித்தனர். கள்ளக்குறிச்யில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மேலும் 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து நல்ல நிலையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாபுரத்தைச் சேர்ந்த ெமாட்டையன் (70) என்ற கூலி தொழிலாளி கூறும்போது, கடந்த 18ம் தேதி மாலை 6 மணியளவில் 2 சாராய பாக்கெட் உடம்பு வலிக்காக வாங்கி குடித்தேன். அன்றிரவே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. காலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது உயிர் பயமாக இருந்தது. அங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நல்ல நிலையில் உள்ளேன். இனிமேல் நான் எக்காரணம் கொண்டும் சாராயம் குடிக்க மாட்டேன். என் உயிர் உள்ளவரை இனி சாராய ஆசை இருக்காது.

எனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உதவிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கண்ணீர் மல்க கூறினார். அதேபோல் தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (33) என்பவர், விஷ சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ள நிலையில் அவர் கூறுகையில், கடந்த 18ம் தேதி ஒரு பாக்கெட் சாராயம் வாங்கி குடித்தேன். முதலில் சங்கராபுரம் மருத்துவமனையில் காண்பித்தேன். அங்கிருந்து வீடு திரும்பும்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். மூச்சுத் திணறல் இருந்த நிலையில், மூக்கு வழியாக சுவாசம் அளிக்கப்பட்டது. எனது குடும்பத்தை இனி கவனிக்கனும். எனக்கு சின்ன வயது. குடும்பத்தினரோடு சேர்ந்து வாழணும். ஏற்கனவே என் குடும்பத்தைவிட்டு போய்விடுவேனோ? என்ற பயம் இருந்து. அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளேன். இனி சாராயம் பக்கமே போகமாட்டேன் என்றார்.

 

The post ‘‘உயிர் உள்ளவரை இனி சாராய ஆசை இருக்காது”: உயிர் பிழைத்த தொழிலாளிகள் கண்ணீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalalakurishi ,
× RELATED விஷச் சாராயம்: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை