×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்தனர். மேலும், 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 14ம் தேதி 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். 2 நாள்கள் மட்டும் மீன்பிடித்து கரை திரும்பினர். இதையடுத்து, பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18ம் தேதி முதல் 5 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பரிதவித்தனர். இந்நிலையில், கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் ஐஸ் கட்டி, மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றி மீன்பிடி தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இரவு 10 மணியளவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடி பணியை தொடர முடியாமல் வேறு பகுதிக்கு ஓட்டி சென்றனர்.

இந்நிலையில், இரண்டு பெரிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், திடீரென ராமேஸ்வரம் மீனவர்களின் மூன்று படகுகளை சுற்றிவளைத்தனர். அதிலிருந்த 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்களை படகுகளுடன் காங்கேசன் துறைமுகம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதை பார்த்த மற்ற மீனவர்கள் மீன்பிடிக்காமல் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் தங்கச்சிமடம் ஜஸ்டின், ரெய்மண்ட், ஹெரின் ஆகியோருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. பலத்த காற்று மற்றும் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் கடலில் சரிவர மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் கரை திரும்பினோம். இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

 

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,Rameswaram ,Ramanathapuram district ,
× RELATED நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்...