×

பல ஆண்டுகளாக போடப்படாத கனவுப்பாதை குரங்கணி-டாப் ஸ்டேஷன் இடையே சாலை அமைக்கப்படுமா?: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்


போடி: பல ஆண்டுகளாக கனவுப்பாதையாக இருக்கும் குரங்கணி- டாப் ஸ்டேஷன் சாலையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இயற்கை பல அதிசயங்களை தன்னிடம் ஒளித்து வைத்திருக்கும் ஒரு இடம் தான் தேனி மாவட்டம். அங்கே எத்தனை அருவிகள் உள்ளது. தேனி மாவட்டத்தின் துவக்கமான தேவதானப்பட்டி முதல் குமுளி வரை ஏராளமான அருவிகள் உள்ளன. சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்ன சுருளி அருவி, குரங்கணி அருவி, எலிவால் அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன.

பெரியாறு பாயும் தேனி மாவட்டத்தில் ஒரு போகம் இரு போகம் அல்ல, முப்போகம் நெல் விளையும் விவசாய பூமி. திராட்சை, ஏலக்காய், பூண்டின் புகழிடம் தேனி தான். 3 பக்கம் மலையும், ஒருபக்கம் மட்டுமே சமவெளியையும் (வத்தலக்குண்டு) கொண்ட மாவட்டம் என்றாலும் அது தேனி மாவட்டம் தான். அந்த மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த இடம் என்றால் அது குரங்கணி தான். இந்த இடம் பலருக்கும் தெரிந்த இடமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த இடம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற டிரக்கிங் சுற்றுலா தலம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீக்கு பிறகு டிரக்கிங் தடை செய்யப்பட்டது.

இப்போது வரை டிரக்கிங் செல்ல அனுமதி கிடையாது. அதே நேரம் டிரக்கிங் போக முடியாது என்றாலும் குரங்கணி மலைப்பாதை மிக அற்புதமான அருவி மற்றும் ஆற்றினை கொண்டிருப்பதால் பலரும் சுற்றுலாவாக வருகிறார்கள். போடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தேனியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலும் குரங்கணி மலைப்பாதை அமைந்துள்ளது. போடியில் முந்தல் சோதனை சாவடியை கடந்து இடதுபக்கம் திரும்பினால் மூணாறு போகும் பாதை என்றால், நேராக சென்றால் குரங்கணி வரும். அந்த சாலையில குறிப்பிட்ட தூரம் பயணித்த பிறகு மேற்கு தொடர்ச்சி மலையின் கால்களில் ஏறி பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். குரங்கணியை நெருங்கினால் உங்களுக்கு அருவிகளும், மாமரங்களின் தோப்பின் வாசமும் உங்களை ஈர்க்கும்.

அப்படியே தொடர்ந்து பயணித்தால் உங்களை சுற்றி எல்லா பக்கமும் மலை இருப்பதையும் நடுவில் பள்ளத்தாக்கு போல் கொட்டக்குடி கிராமும் குரங்கணி அருவியும் இருப்பதையும் உணர முடியும்.
குரங்கணி அருவி என்பது மலைகளுக்கு நடுவில் உள்ள பகுதியாகும். மிகவும் சுத்தமான தண்ணீர். மலைகளை கிழித்துக் கொண்டு பாயும் அந்த மூலிகை தண்ணீர் உங்களை பரவசத்தில் ஆழ்த்தும். குரங்கணியில் சிறிய அளவில் தான் கடைகள் இருக்கும். அங்கு கண்டிப்பாக செல்போன் சிக்னல் வேலை செய்யாது. செல்போனை மறந்து நண்பர்களுடன் பொழுதை கழிக்கலாம். அங்கிருந்து மலைப்பாதையில் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் மூணாறு பாதையில் உள்ள டாப் ஸ்டேஷனுக்கு போய்விட முடியும். மிக அற்புதமான மலைப்பாதையாகும்.

இங்கு டிரக்கிங் செல்வதற்கு 16 விதிமுறைகள் உள்ளது. இதனை முறையாக பின்பற்றினால் அவர்கள் இந்த வ்ழியாக செல்லலாம். ஆனால் அதேநேரம் மூணாறு வழியாக டாப் ஸ்டேசன் சென்று அங்கிருந்து சில கிலோ மீட்டர் காட்டிற்குள் பயணித்து டென்ட்டில் தங்க முடியும். அங்கு அதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. டாப் ஸ்டேசன் டூ குரங்கணி வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் தான் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போடி அருகே உள்ள குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷனிற்கு இதுவரை சாலை அமைக்கப்படாததால் இப்பகுதி மக்கள் வனப்பகுதியில் உள்ள ஆபத்தான ஒற்றையடிப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவசர சிகிச்சை கூட பெற முடியாத நிலை உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள டாப் ஸ்டேஷனை சுற்றிலும் எல்லப்பை, குண்டலை, சிட்டிவாரை, வட்டவடை, செருவாரை, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 26 நிறுவனங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு போடி, தேவாரம், சிலமலை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பல தலைமுறைகளாக இவர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை, குடும்ப நிகழ்ச்சி, பண்டிகை போன்ற காலங்களில் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர்.

குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரை இவர்களுக்கு சாலை வசதி கிடையாது. வனப்பகுதியில் உள்ள ஒற்றையடிப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். வாகனம் மூலம் இவர்கள் டாப் ஸ்டேஷன் செல்ல வேண்டும் என்றால் போடியில் இருந்து முந்தல், போடிமெட்டு, நெடுங்கண்டம், மூணாறு வழியாக ஏறத்தாழ 80 கி.மீ.க்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் 4 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. சுற்றி செல்வதால் நேர விரயம், அதிக செலவு உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளதால் இவர்கள் 7 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியே நடந்து சென்று வருகின்றனர்.

மருத்துவம், அவசரம், தொடர் மழை போன்ற நேரங்களில் குறிப்பாக இரவில் இப்பாதையை கடக்க முடியாத நிலை உள்ளது. விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பகலிலும் இவர்கள் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள முதுவான்குடி, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தனியார் நிலங்கள் உள்ளன. இங்கு இலவம், காபி, பலா, ஏலக்காய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. பாதை வசதி இல்லாததால் விளைபொருட்களை குரங்கணி வழியே போடி, தேனி பகுதிகளுக்கு கொண்டு வர விவசாயிகள் சிரமப்படுகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள், விளைபொருட்கள் உள்ளிட்டவையும் குதிரை மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.

மருத்துவம் போன்ற அவசர நேரங்களில் நோயாளிகளை டோலி கட்டியே குரங்கணிக்கு கொண்டு செல்கின்றனர். எனவே விவசாயிகள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் பகுதிக்கு சாலை வசதி அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது குரங்கணியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வனத்துறை சோதனைச் சாவடி வரை ஜீப் செல்வதற்கான பாதை உள்ளது. அதற்குப் பிறகு பாதை வசதி இல்லை. எனவே குரங்கணி- டாப் ஸ்டேஷன் இடையே சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘டாப்ஸ்டேஷன் வரை பாதை அமைத்து பொதுப் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும். இப்பாதை அமைவதின் மூலம் குரங்கணியில் இருந்து மூணாறுக்கு 25 கி.மீ. தூர பயணத்தில் சென்று விட முடியும். இதனால் சுற்றுலா மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும் மூணாறு செல்வதற்கான மாற்றுப் பாதையாகவும் இது அமையும். அது மட்டுமின்றி விவசாய பொருட்களை அண்டை மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றாலும், போடி சென்று அங்கிருந்து மூணாறு வழியாக கேரளாவிற்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு விவசாயிகள் நலன் மற்றும் சுற்றுலாத்துறையை விரிவாக்கும் நிலையை கருத்தில் கொண்டு சாலை அமைக்க வேண்டும்’’ என்றனர்.
நோ என்ட்ரி

குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கும் பயணிக்க முடியும். ஆனால் இந்த பாதையில் தான் பலர் காட்டுத்தீயில் இறந்தார்கள் என்பதால் அனுமதி இல்லை. கொழுக்குமலை என்பது ஆசியாவின் மிக உயரமான தேயிலை தோட்டங்கள் உள்ள பகுதியாகும். ஒரு இரவு அங்கு தங்கினால் சொர்க்கத்தை பார்த்துவிட்ட அனுபவம் கிடைக்கும். அவ்வளவு அற்புதமான இடம், போய் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

The post பல ஆண்டுகளாக போடப்படாத கனவுப்பாதை குரங்கணி-டாப் ஸ்டேஷன் இடையே சாலை அமைக்கப்படுமா?: எதிர்பார்ப்பில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : BODI ,Theni district ,
× RELATED தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு