×

தமிழ்நாட்டில் முதன்முறையாக முழங்கால் காயத்திற்கு செயற்கை தசைநாண் பயன்படுத்தி சிகிச்சை: ரேலா மருத்துவமனை சாதனை

தாம்பரம்: சென்னையை சேர்ந்தவர் மணிகண்டன் (23), மென் மென்பொறியாளரான இவருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில், பல தசைநாண்கள் சேதத்துடன் முழங்கால் மூட்டு காயம் ஏற்பட்டு, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆர்த்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.’

இதன்மூலம் தமிழ்நாட்டின் மருத்துவ சிகிச்சை வரலாற்றில் செயற்கை தசைநாண்களை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த சிகிச்சை குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை ரேலா மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களிடம் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை கூறியதாவது: இந்தியாவில் முதல்முறையாக முழங்கால் மூட்டில் முன்புற கூட்டல் குறி தசைநாண் மற்றும் பின்புற கூட்டல்குறி தசைநாண் என்று இரு முக்கியமான தசைநாண்களை பொருத்தி மறு கட்டமைப்பை மேற்கொண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை தசைநாண்களை உபயோகப்படுத்தியுள்ளோம். இந்த சிகிச்சை 23வயது இளைஞருக்கு செய்யப்பட்டுள்ளது. அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டு ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவரது இடுப்பில் ஏற்பட்ட காயத்தை சரிசெய்து, 3 மாதங்களுக்கு முன்பு முழங்கால் மூட்டு காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து சரி செய்துள்ளோம். இந்த சிகிச்சை செயற்கை தசைநாண்களை மூலம் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட இளைஞரால் விரைவில் இயல்பாக செயல்பட முடியும்.

சம்பந்தப்பட்ட இளைஞரின் உடலில் உள்ள தசைநாண்களை எடுத்து செய்யும் சிகிச்சை விட செயற்கை தசைநாண்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள சிகிச்சையால் அவர் எளிதில் குணமாவார். இந்த சிகிச்சையை போலந்து நாட்டின் டாக்டர் க்ளாடியஸ் என்பருடன் இணைந்து ரேலா மருத்துவமனையில் செய்துள்ளோம். இதை அனைவரும் செய்து கொள்ளலாம். இதனுடைய ஆயுள் காலம் நீண்ட நாட்கள் இருக்கும். உடலில் எங்கெல்லாம் தசைநாண்கள் உள்ளதோ அங்கெல்லாம் இந்த சிகிச்சையை செய்யலாம், உதாரணத்திற்கு முழங்கால் மூட்டில் வெளி தசைநாண்களுக்கும், கணுக்கால், இடுப்பு, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு பகுதிகளில் இந்த சிகிச்சை செய்யலாம்.

இதற்கான சிகிச்சை செலவு சாதாரண சிகிச்சையை விட சிறிய அளவு அதிகமாக இருக்கும். காப்பீடு திட்டத்தில் இதுவரை இந்த சிகிச்சை இணைக்கப்படவில்லை இனிமேல் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதா என்பதும் தெரியவில்லை என தெரிவித்தார். போலந்து நாட்டின் டாக்டர் க்ளாடியஸ் கொசொவஸ்கி பேசுகையில், ‘‘இந்த செயற்கையான தசைநாண்கள், உறுதியான பாலித்தீன் மூலப்பொருளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆற்றல் மற்றும் நீண்டகாலம் உழைக்கும் திறன் ஆகிய அம்சங்களில் இயற்கையான தசைநாண்களுக்கு இவை நிகரானவை. முழங்காலில் ஏற்படும் அனைத்து காயங்களிலும் சுமார் 15-20 சதவீத காயங்கள், தசைநாண்களின் மறுகட்டமைப்பு தேவைப்படுகிறதாக இருக்கின்றன,’’ என்றார்.

The post தமிழ்நாட்டில் முதன்முறையாக முழங்கால் காயத்திற்கு செயற்கை தசைநாண் பயன்படுத்தி சிகிச்சை: ரேலா மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rela Hospital ,Tambaram ,Manikandan ,Chennai ,Chrompet ,Dinakaran ,
× RELATED ரேலா மருத்துவமனை தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது