×
Saravana Stores

காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் – பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தல்

சென்னை: குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒகேனக்கல் – பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலாறு தென்னிந்தியாவில் ஓடும் மிக முக்கிய ஆறு ஆகும். இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் ஹால்தி நந்தி துர்கம் மலையில் உற்பத்தியாகிறது. இது கர்நாடக மாநிலத்தில் 93 கி.மீ தூரமும், ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ தூரமும், தமிழகத்தில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் புள்ளூர் கிராமத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்க பட்டினத்திற்கு அருகே வயலூர் என்னுமிடத்தில் வந்து வங்கக் கடலில் சங்கமம் ஆகிறது.

தமிழகத்தில் பாலாறு 222 கி.மீ தூரம் பயணம் செய்யும் நிலையில், மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நதியாக உள்ளது. மற்ற காலங்களில் வறண்டே காணப்படுகிறது. தற்போது மழையளவு குறைந்துவிட்ட காரணத்தால் பாலாற்றினை நம்பியுள்ள விவசாயிகள் மட்டுமின்றி கால்நடைகளும் பெரிதும் பாதிப்படைகின்றன. இந்த அவலநிலையை போக்க பாலாற்றையும், ஒக்கேனக்கலையும் இணைத்தால் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்கள் இயற்கை வளமாகும்.

பாலாறு, ஒகேனக்கல் இடையே மலட்டாறு, பொன்னை அணைக்கட்டு, மண்ணாறு, கவுண்டன்யா நதி உள்ளிட்டவை உள்ளன. மலட்டாறு (கொட்டாறுவங்கா): மோர்தானா நாயக்கன் ஏரிச்சாரக்கல்லு ஆகிய பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருந்து உற்பத்தியாகி குடியாத்தம் வட்டத்தில் உள்ள கோமேஸ்வரம் என்ற இடத்தில் பாலாற்றுடன் கலக்கிறது. பொன்னை அணைக்கட்டு: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கேசம் மலைகளில் உற்பத்தியாகி சுமார் 85 கி.மீ வரை பாய்கிறது. வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம் காரை கிராமம் அருகே பாலாற்றுடன் சேரும் பொன்னை உபரிநீர் பாலாற்றில் கலக்கிறது. பொன்னை ஆற்றின் குறுக்கே பொன்னை கிராமத்துக்கு அருகில் 216.50 மீட்டர் நீளத்தில் 1855ம் ஆண்டு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இவ்வணை மூலம் வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 129 ஏரிகள் நீர்வளம் பெற்று 8,671.00 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மண்ணாறு: இந்த ஆறு ஆந்திராவில் தொடங்கி வாணியம்பாடி வட்டம், திம்மாம்பேட்டை அருகில் பாலாற்றுடன் கலக்கிறது. கவுண்டன்யா நதி: ஆந்திரப்பிரதேசம் பலமநேர் வட்டத்தில் மோர்தானா, சைனகுண்டா, பரதராமி ஆகிய காடுகளில் உற்பத்தியாகி குடியாத்தம் வட்டத்தில் வேப்பூர் அருகே பாலாற்றுடன் சேருகிறது. கவுண்டன்யா நதியின் குறுக்கே பெரும்பாடி கிராமத்துக்கு அருகில் ஒரு படுகை அணை கட்டப்பட்டு, இதனால் செருவங்கி ஏரிக்கு நீர் வசதி செய்யப்படுகிறது. இதன் மொத்த பாசனபரப்பு 1,008 ஏக்கராகும். கோட்டூர் காடுகளில் உற்பத்தியாகி வாணியம்பாடி அருகே பாலாற்றில் கலக்கிறது. இதன் குறுக்கே கேத்தாண்டப்பட்டி, கோவிந்தாபுரம் ஆகிய அணைக்கட்டுகள் உள்ளன.

பச்சூர் ஆறு: கோட்டூர் காடுகளில் உற்பத்தியாகி பச்சூர் எனப் பெயர்பெற்று கோட்டாறு என மருவி திருப்பத்தூர் வட்டம், பெரிய மோட்டூர் அருகே கல்லாற்றில் கலந்து பாலாற்றுடன் சேருகிறது. இதன் குறுக்கே பச்சூர், நாட்ராம்பள்ளி, காவேரிப்பட்டு அணைக்கட்டுகள் உள்ளன. ஆனைமடுவு கானாறு: இது ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி ஆம்பூருக்கு வடக்கே பாலாற்றுடன் கலக்கிறது. பொதுமக்களின் குடிநீருக்காக ஆம்பூர் நகரத்தின் அருகே நிலத்தடிநீர் மேம்பாடு செய்ய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

வெள்ளக்கல் கானாறு முலைமடுவு கானாறு: இந்த கானாறு ஆம்பூர் வெள்ளக்கல் காடுகளில் உற்பத்தியாகி வாணியம்பாடி வட்டத்தில் ஆலங்குப்பம் என்னும் இடத்தில் பாலாற்றுடன் சேருகிறது.
தென் இந்தியாவில், தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்தாலும், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஏரிகள் மற்றும் பயிர்கள் அழிந்து விடுகின்றன. ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும், ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், வடதமிழகத்தைச் சேர்ந்த மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சியாகவே காணப்படுகின்றன.

இதற்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய, மாநில அரசும், பொதுப்பணித்துறையும், வருவாய்த்துறையும் சேர்ந்து இந்த ஒகேனக்கல் – பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த துரித நடவடிக்கை எடுத்தால், வடதமிழகத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

இதுகுறித்து, சமூக நீதி மற்றும் உரிமை அளித்தல் தேசிய ஆலோசனை குழு உறுப்பினரும், தூசி மாமண்டூர் ஏரி பாசன விவசாயிகள் சங்க முன்னாள் தலைவருமான வக்கீல் தமிழ்ச்செல்வன் கூறுகையில், ஒகேனக்கல் – பாலாறு இணைப்பு திட்டம் கடந்த 25 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இதை வலியுறுத்த வேண்டும். இந்த ஒகேனக்கல் பாலாறு இணைப்பு பணி முடிந்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு குடிநீர் பிரச்னையே இருக்காது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆகவே, இந்த திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

The post காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் – பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chennai ,South India ,HALDI ,NANDI ,KOLAR DISTRICT OF ,KARNATAKA STATE ,
× RELATED மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை விரைவில் அமல்!