×

வேளச்சேரி ஏரியில் மழைநீர் கலப்பதற்கு இடையூறு கக்கன் நகர் மேம்பாலத்தின் கீழ் திடக்கழிவை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் மற்றும் வேளச்சேரி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவது வேளச்சேரி ஏரியாகும். 265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஆக்கிரமிப்பில் சிக்கி, தற்போது 56 ஏக்கரில் மிஞ்சி நிற்கிறது. ஒவ்வொரு மழைக்கு முன்பும் பொதுப்பணித் துறையினரும், நீர்வளத் துறையினரும் ஆங்காங்கே சில இடங்களில் இந்த ஏரியை தூர்வாரி செல்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கும் சங்கமமாக இந்த ஏரி மாறியுள்ளது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்போர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வேளச்சேரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதியான என்ஜிஓ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, சிட்டி லிங்க் ரோடு, கக்கன் நகர், சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர் மற்றும் ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணபுரம், ராமகிருஷ்ணபுரம், ஆபீசர் காலனி, திருவள்ளூர் நகர், அம்பேத்கர் நகர், ராமகிருஷ்ணபுரம் போன்ற பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் வேளச்சேரி ஏரியில் வந்து சங்கமமாகிறது.

ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் கக்கன் நகர் மேம்பாலத்தின் வழியாக ஏரியில் கலக்க வேண்டும். மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் பிளாஸ்டிக், குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகள் போன்றவை தேங்கி ஏரிக்கு வரும் மழை நீரை தடுத்து நிறுத்தும் வகையில் உள்ளது. இதனால் மழை பெய்யும்போதெல்லாம் ஏரியில் கலக்க வேண்டிய நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.

ஆதம்பாக்கம் கக்கன் நகர் மேம்பாலத்தின் வழியாகச் செல்லும் அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை. மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவுகளை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் வருவதற்குள் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post வேளச்சேரி ஏரியில் மழைநீர் கலப்பதற்கு இடையூறு கக்கன் நகர் மேம்பாலத்தின் கீழ் திடக்கழிவை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kakan Nagar ,Velachery lake ,Alandur ,Adambakkam ,Velachery ,resources ,Dinakaran ,
× RELATED மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில்...