×

அண்ணாநகர் டவர் பார்க் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் சென்னை மாநகராட்சி மாமன்ற கூடம் ரூ.75 கோடியில் புதிதாக கட்டப்படும்


சென்னை: அண்ணாநகர் டவர் பார்க் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் என்றும், சென்னை மாநகராட்சி மாமன்ற கூடம் ரூ.75 ேகாடியில் ரிப்பன் மாளிகையில் புதிதாக கட்டப்படும் என்றும், ரூ.30 கோடியில் 16 புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ.35 கோடியில் பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்தப்படும். மற்றும் 16 புதிய பள்ளி கட்டிடங்கள் ரூ.30 கோடியில் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்கும் செயல் திறனை மேம்படுத்த ரூ.2.20 கோடியில் 100 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். நகர்ப்புறங்களை பசுமையாக்கி இயற்கை சூழலை மேம்படுத்த 14 புதிய பூங்காக்கள் மற்றும் 6 நவீன விளையாட்டு திடல்கள் ரூ.10 கோடியில் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படும்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் எண்ணூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் ரூ.75 கோடியிலும், ெகாடுங்கையூர் கால்வாயின் குறுக்கே தண்டையார்பேட்டை மற்றும் கடும்பாடி அம்மன் கோயில் தெருவை இணைக்கும் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் ரூ.8.2 கோடியில் கட்டப்படும். பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 3 இடங்களில் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் இணைக்கும் வகையில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி சாலை, அறிஞர் அண்ணா சாலை-பாண்டியன் சாலை ஆகிய இடங்களில் இரும்பு பாலங்கள் ரூ.21 கோடியில் அமைக்கப்படும்.

50 பூங்காக்களில் ஸ்பான்ஸ் பார்க் ரூ.15 கோடியில் அமைக்கப்படும். கலைஞர் நூற்றாண்டு விழாவில் தொடர்ச்சியாக ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீரை அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் மழைநீர் தொட்டிகள் 15 இடங்களில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மண்டலம்-8ல் உள்ள டாக்டர் விஸ்வேஸ்வரையா பூங்கா (அண்ணா நகர் டவர் பார்க்) பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை இறைச்சிக் கூடம் ரூ.45 ேகாடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் 7 புதிய எரிவாயு தகன மேடைகள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாநகர் டவர் பார்க் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் சென்னை மாநகராட்சி மாமன்ற கூடம் ரூ.75 கோடியில் புதிதாக கட்டப்படும் appeared first on Dinakaran.

Tags : Annanagar Tower Park ,Chennai Corporation Council House ,Chennai ,Minister ,KN Nehru ,Chennai Municipal ,Corporation Hall ,Ribbon House ,Chennai Corporation Council Chamber ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...