கோபால்பட்டி: தமிழகத்தில் சேலம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாமரங்கள் அதிகம் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு உயர் ரக மாம்பழங்களாக அல்போன்சா, பங்களப்பள்ளி, இமாம், பிரசாந்த், மல்கோவா போன்ற ரகங்களும் காசாலட்டு, கல்லாமை, கிரேப் போன்ற ரகங்களும் விளைவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மா சீசனானது கடந்த மாதம் துவங்கியது ஆண்டிற்கு 4 மாதங்கள் இருக்க வேண்டிய மா சீசனானது இந்த ஆண்டு ஒரே மாதத்தில் முடிவடைந்து விட்டது. இதற்கு விவசாயிகள் மாமரங்களுக்கு கல்தார் மருந்து தெளித்து இடைப்பட்ட காலங்களில் மாங்காய்களை அறுவடை செய்து கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்ததே காரணமாகும். ஒரு சில காலங்களில் கல்தார் வைப்பதால் பூக்காத மாமரத்தில் கூட மா பூக்கள் அதிகமாக பூவெடுத்து மா பிஞ்சு விட்டு 90 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய மாங்காய்கள் 70 நாட்களிலே அறுவடை செய்யப்படுகிறது.
உலகிலேயே கோத்தாரி கல்லாமை என்று அழைக்கக்கூடிய நாட்டுக்காய் தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றது. அப்படி கிடைக்கக்கூடிய அரிய வகை மாம்பழங்களுக்கு கல்தார் என்கின்ற மருந்தை கூடுதல் மகசூலுக்காக தெளிப்பதால் அவற்றில் பிரிக்ஸ் (இனிப்பு சுவை) தன்மை குறைந்து விடுகிறது. அதாவது பொதுவாக 17 சதவீதம் பிரிக்ஸ் கிடைக்கக்கூடிய இடத்தில் 14 சதவீதம் பிரிக்ஸ் கிடைக்கிறது என்றும், இதனால் கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு மாம்பள ஜூஸ்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும், இதன் காரணமாக உள்ளூரிலேயே மாம்பழ ஜூஸ்களை விற்க வேண்டிய நிலைய ஏற்படுவதாகவும் ஜூஸ் பேக்டரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து கணவாய்பட்டியை சேர்ந்த ஜூஸ் பேக்டரி உரிமையாளர் பழனிச்சாமி கூறியதாவது: மாமரங்களில் கல்தார் தெளிப்பதால் கடந்த 3 ஆண்டுகளாக மாம்பழங்களின் இனிப்பு தன்மை குறைந்து அதன் ஜூஸை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, மாம்பழ ஜூஸ் உற்பத்தியாளர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
கல்தாரை பயன்படுத்தாமல் விளைச்சல் செய்ய நடவடிக்கை எடுத்தால் மாம்பழங்களின் தரம் உயர்ந்து காணப்படுவதுடன், மா விவசாயிகள், ஜூஸ் பேக்டரி உரிமையாளர்களுக்கும் கூடுதலான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே வரும்காலங்களில் விவசாயிகள் கல்தார் வைக்காமல் இயற்கையான முறையில் மா விவசாயம் செய்திட வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post கல்தார் தெளிப்பதால் குறையும் இனிப்பு சுவை; வெளிநாடுகளுக்கு மாம்பழ ஜூஸ் ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிப்பு appeared first on Dinakaran.