சித்தூர்: சித்தூர் மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், மழையால் மகசூல் குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் அறுவடைக்கு முன்பே அழுகிவிடுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு, கர்நாடகாவுக்கான ஏற்றுமதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குப்பம், வி.கோட்டா, பைரெட்டி பள்ளி, மதனப்பள்ளி, சவுடை பள்ளி, புங்கனூர், பங்காரு பாளையம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட மண்டலங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
நிலத்தில் விதை தூவிய நாளில் இருந்து 90 நாட்களில் விவசாயிகள் தக்காளி அறுவடை செய்கின்றனர். அதன்படி தினமும் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். தொடர்ந்து சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் தக்காளி மகசூல் வெகுவாக குறைந்தது. இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. தற்போது 1 கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் தக்காளி மகசூல் பாதிப்படைந்துள்ளதால், விவசாயிகளும் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பூச்சிக்கொல்லி, உரம் என ஒரு ஏக்கருக்கு தக்காளி பயிரிட ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி அறுவடை காலத்தை எட்டுவதற்கு முன்பே செடிகளிலேயே அழுகிவிடுகிறது. இதனால் தக்காளி மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது. தக்காளி மகசூல் குறைந்தபோதும், விலை உயர்ந்துள்ளதால், ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்த பணம் வந்துவிடும். ஆனால் மழை நீடித்தால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.
சித்தூர் மாநகரத்தில் மார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் கொள்முதல் செய்கிறார்கள். மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்வது ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ரூ.100 கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தினமும் சமையலுக்கு கண்டிப்பாக பயன்படுத்தப்படும் தக்காளி தற்போது கிடு கிடுவென விலை உயர்ந்து கிலோ ரூ.100 வரை விற்பனையாகிறது. இதனால் சாமானிய மக்கள், ஏழை, எளிய மக்கள் குறைந்த அளவு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். எனவே தக்காளியை மாநில அரசு கொள்முதல் செய்து விவசாய சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு தக்காளி விலை கிலோ ரூ.150 வரை விற்பனை செய்தபோது ஒரு நபருக்கு ஒரு கிலோ வீதம் ரூ.50க்கு தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதேபோல் தற்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post மழையால் மகசூல் குறைந்து தக்காளி விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.