×
Saravana Stores

கொடைக்கானலில் சவ்சவ் விலை சரிந்தது: விவசாயிகள் கவலை

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் சவ்சவ் காய் விளைச்சல் அதிகமிருந்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தோட்டக்கலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், அவரை, முட்டைக்கோஸ், சவ்சவ் உள்ளிட்டவற்றை அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் காய்கறிகள் மதுரை, சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள பேத்துப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் சவ்சவ் அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் சவ்சவ் விளைச்சல் அமோகமாக இருந்தும், அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கீழ்மலை பகுதிகளில் சவ்சவ் விளைச்சல் அதிகரிப்பால் விலை மிகவும் குறைந்து விற்பனையாகிறது. கடந்த காலங்களில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்று வந்த சவ்சவ், தற்போது ஒரு கிலோ ரூ.5 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post கொடைக்கானலில் சவ்சவ் விலை சரிந்தது: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்