×

சட்டசபை தேர்தலில் அதிமுக காலைவாரியதாக குற்றச்சாட்டு; பாமக நிறுவனர் ராமதாசுக்கு முன்னாள் அமைச்சர்கள் பதிலடி: யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்வதில்லை என கருத்து

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக காலை வாரிவிட்டது என்ற ராமதாஸ் பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். தங்கள் கட்சி யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்ததில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பாமக 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு அதிமுகவினர் ஒழுங்காக தேர்தல் பணி செய்யாததே காரணம் என்று அப்போது பாமக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. பாமகவை தோற்கடிக்க வேண்டும் என்ற பாணியில் அதிமுகவினர் வேலை பார்த்ததாகவும் குற்றம் சாட்டியது. இதற்கு அதிமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. பாமகவை கூட்டணியில் சேர்த்தது தான் அதிமுக தோல்விக்கு காரணம் என்றும் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து அதிமுக, பாமகவுடன் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் வர உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை அள்ளி வீசியுள்ளார். அதாவது, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ‘‘ஆரம்பத்தில் தனியாக போட்டியிட்டு 4 எம்எல்ஏ சீட் வென்றோம். அப்படியே தொடர்ந்து தனித்து போட்டியிட்டு இருந்தால், ஆட்சியை கைப்பற்றியிருக்கலாம். ஆனால், சிலர் கூறியதன் பேரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோற்றோம். தேர்தலில் கூட்டணி என்றாலே கால் வாருவதாக இருக்கிறது. கூட்டணி தர்மமெல்லாம், அதர்மமாகிவிட்டது. கடந்த தேர்தலில் 23 தொகுதியில் போட்டியிட்ட நிலையில், குறைந்தது 15 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்\” என்று அதிமுகவை குற்றம் சாட்டி சரமாரியாக பேசினார். ராமதாசின் இந்த அதிரடி பேச்சு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ராமதாசின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘‘அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகிறார். அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது. அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துக்கு பதில் கூற வேண்டிய தேவையில்லை. தேவையென்றால் அவர்களது கருத்துகளுக்கு அதிமுக தலைமை பதில் கூறும். பாஜ தான் எதிர்க்கட்சியாக செயல்படுவது போல், போராட்டம் நடத்துவது, ஆளுநரை சந்திப்பது என இருப்பதாக கூறுகிறீர்கள். அது வளரும் கட்சி. அவர்கள் செயல்பாடு அப்படிதான் இருக்கும். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களை கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். போராட்டம் என்று மக்களை தொந்தரவு செய்யவோ, இடையூறு செய்யவோ அதிமுக தலைவர்கள் விரும்பவில்லை. மக்களுக்காக அதிமுக மட்டுமே போராடி வருகிறது’’ என்றார். காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் எங்களுக்கு கோயில் போன்றது. அதனை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் அதிமுக உறுதியாக உள்ளது. இதற்காக தற்போது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பணிகளில் ஈடுபட உள்ளோம். இதற்கு தீபக் மற்றும் தீபா ஆகியோர் ஆதரவு தெரிவிக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து நிருபர்கள், ‘பாமக நிறுவனர் ராமதாஸ் சட்டசபை தேர்தலில் அதிமுக காலை வாரி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளாரே’ என்று கேட்டனர். அதற்கு ஜெயக்குமார், ‘யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்து எங்களுக்கு பழக்கம் இல்லை. அவரது கருத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை’ என்று பதில் அளித்தார்….

The post சட்டசபை தேர்தலில் அதிமுக காலைவாரியதாக குற்றச்சாட்டு; பாமக நிறுவனர் ராமதாசுக்கு முன்னாள் அமைச்சர்கள் பதிலடி: யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்வதில்லை என கருத்து appeared first on Dinakaran.

Tags : AIADMK ,PAMAK ,Ramadas ,CHENNAI ,Ramdas ,Bamaka ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்துபேச...