×

நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைத்தது ஒன்றிய சுகாதார அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். முதுநிலை நீட் தேர்வின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும் பொருட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததால் சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திடீரென ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். தேர்வெழுத நீண்ட தூரம் பயணித்து வெளியூர் சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான இடங்கள், நீட் – PG தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இத்தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.

எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு 2024-25 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் ஜூன் 23 ஆம் தேதியான நாளை நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென நீட் – முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். சில போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த சமீபத்திய குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட் முதுநிலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. நீட் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் தான் முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்நிலையில், நீட் தேர்வை நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைத்தது ஒன்றிய சுகாதார அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : UNION MINISTRY OF HEALTH ,Delhi ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த...