×

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி பலியான மாணவி குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

குடியாத்தம், ஜூன் 23: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலியான நிலையில், நிவாரணம் வழங்க கோரி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சடலத்தை கொண்டு சென்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கோபி மகள் சஞ்சனா(14). அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் காய வைத்துள்ளார். பின்னர், சுவிட்ச்சை ஆப் செய்யாமல், தண்ணீரில் கை வைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் தாக்கியதில் சஞ்சனா தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பரதராமி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சஞ்சனா பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கிராம மக்கள் நேற்று பரதராமி அரசு ஆரம்ப சுகாதார மையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பரதராமியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பரதராமி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிறுமி சஞ்சனாவின் உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்போது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உயிரிழந்த, சிறுமி குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, தாசில்தார் சித்ராதேவி சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் சடலத்தை பெற்று சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி பலியான மாணவி குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Gudiatham ,Vellore ,Dinakaran ,
× RELATED குடியாத்தம் அருகே கோயிலுக்கு சென்ற பெண்ணை கடித்து குதறிய தெருநாய்