×

தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

தாம்பரம், ஜூன் 23: தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. சென்னையில் பணியாற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள், வார இறுதி நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலம் செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வார இறுதி நாட்களில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம், முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

தாம்பரம் – ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயங்கும் வகையில் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06051) இயக்கப்படுகிறது. இந்த, ரயில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும். அதன்படி ஜூன் 21, 23, 28, 30, ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு பறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக ராமநாதபுரம் – தாம்பரம் இடையே வாரம் இருமுறை அதாவது சனி மற்றும் திங்கட்கிழமைகளில் இயங்கும் வகையில் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06052) இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் ஜூன் 22, 24, 29, ஜூலை 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்தடையும்.
இந்த ரயில்கள் இருமார்க்கமாக செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்ற ராமநாதபுரம் ரயிலில் ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

The post தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Ramanathapuram ,Chennai ,Dinakaran ,
× RELATED வழக்கில் ஆஜராகாத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்