×

குழந்தையை பார்க்க விவாகரத்து பெற்ற கணவருக்கு அனுமதி மறுப்பா? குடும்பநல நீதிமன்றத்தில் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்: உயர்நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு

சென்னை: சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மாலாவுக்கும், வியாசர்பாடியை சேர்ந்த பிரேம்குமாருக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மாலா விவாகரத்து பெற்றுள்ளார். விவாகரத்து தீர்ப்பில் குழந்தையை பிரேம்குமார் மாதத்தில் முதல் மற்றும் 3ம் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணிவரை குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது குழந்தையை பிரேம்குமார் பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாலா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பிரசன்னா, குடும்ப நல நீதிமன்ற உத்தரவை மாலா கடைபிடிக்கவில்லை. குழந்தையை பிரேம்குமார் பார்ப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை.

குழந்தைக்கு வரும் 24ம் தேதி (நாளை) பிறந்தநாள். அதனால், அந்த பிறந்தநாளில் பிரேம்குமார் கலந்துகொள்ள அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதற்கு மாலா தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவில், மனுதாரர் மற்றும் அவரது குழந்தையின் தந்தை, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி மற்றும் மற்ற உறவினர்கள் ஜூன் 24ம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு காலை 11 மணிக்கு வந்து குழந்தைக்கு பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடலாம். இந்த நிகழ்ச்சியை கவனிக்க தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வாலண்டியர்களை நியமிக்க வேண்டும். நிகழ்வு குறித்து 26ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post குழந்தையை பார்க்க விவாகரத்து பெற்ற கணவருக்கு அனுமதி மறுப்பா? குடும்பநல நீதிமன்றத்தில் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்: உயர்நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mala ,Tiruvottiyur ,Premkumar ,Vyasarpadi ,Chennai Family Court ,Dinakaran ,
× RELATED விவாகரத்து பெற்றாலும் மகளை பார்க்க...