×

20 நாளுக்குள் 4 மாவட்டங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் சென்னை மாநகராட்சி வார்டுகள் 200ல் இருந்து 300ஆக உயரும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: அடுத்த 20 நாட்களுக்குள் 4 மாவட்டங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும், சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200ல் இருந்து 300 ஆக உயர வாய்ப்புள்ளது என்றும், தரம் உயர்த்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசியதாவது: நகரங்களின் அபரிதமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், வளர்ந்து வரும் நகர்புற வளர்ச்சி, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் ஆன்மீக தலங்கள், நகரத்திற்கு வந்து செல்லும் மக்களின் வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நகர்புற உள்ளாட்சிகளின் நிலையை உயர்த்தவும் மற்றும் தகுதியான கிராம ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தவும், மேலும் இவற்றிற்கு அருகில் அமைந்துள்ள வளர்ச்சியடைந்த உள்ளாட்சிகளை இணைத்து நகர்புறங்களை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் தொகை அதிகமாகி வரும் பகுதிகளில் இவ்வாறு தரம் உயர்த்தினால்தான் சில பணிகளை செய்ய முடியும். ஊராட்சிகளை பேரூராட்சியாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. யாருடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவோ நகராட்சிகளோ மாற்றப்படுவதில்லை. மக்கள்தொகை அதிகம் இருப்பதன் காரணமாகவே ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் தற்போது இருக்கின்றன. பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும். தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. அவை 159 ஆக உயரும். தமிழகத்தில் 25 மாநகராட்சிகள் தற்போது இருக்கும் நிலையில் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நான்கு நகராட்சிகள் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சென்னை மாநகரில் மொத்த மக்கள் தொகை 89 லட்சமாக உள்ளது. இதில் 200 வார்டுகள் உள்ளன. ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாகவும் வசிக்கின்றனர். எனவே சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200ல் இருந்து 300 ஆக உயரும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 20 நாளுக்குள் 4 மாவட்டங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் சென்னை மாநகராட்சி வார்டுகள் 200ல் இருந்து 300ஆக உயரும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Minister ,KN Nehru ,Chennai ,Minister KN Nehru ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின்...