சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்த 6 வெடிகுண்டு மிரட்டல்களில், ஒரு வெடிகுண்டு மிரட்டலில் சம்பந்தப்பட்ட திருவையாறை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பூரில் எதிர் வீட்டுக்காரரை பழிவாங்குவதற்காக, இந்த செயலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 18ம் தேதி காலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெறும் புரளி என்று தெரிய வந்தது. ஆனாலும் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிராஞ்ச் போலீசார், வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து, தீவிர விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறில் இருந்து மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் தனிப்படையினர், தஞ்சை மாவட்டம் சென்று புலன் விசாரணை நடத்தியதில், திருவையாறு பகுதியை சேர்ந்த பிரசன்னா (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்ததாகவும், அப்போது எதிர் வீட்டுக்காரர் ஒருவரிடம் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அவரை பழிவாங்குவதற்காக, அவருடைய பெயரில் போலியான இ-மெயில் ஐடி உருவாக்கி, இதுபோன்ற மிரட்டல் புரளியை கிளப்பி விட்டது தெரியவந்தது.
அதோடு அதற்காக பயன்படுத்திய ஆண்ட்ராய்டு செல்போன், இன்டர்நெட் மோடம் மற்றும் ரூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்பு பிரசன்னாவை பலத்த காவலுடன், சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மேலும் 5 வெடிகுண்டு மிரட்டல்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. அவர்களையும் விரைவில் தீவிர புலன் விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தால் தேவை இல்லாமல் வெடிகுண்டு புரளி கிளப்பி விடும் சம்பவங்கள் குறையும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
The post சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவையாறு வாலிபர் அதிரடி கைது: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.