×

1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1995ம் ஆண்டுக்குப் பின்னர் பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1988ம் ஆண்டுக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில் கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக் கோரி 1995ம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், மனுதாரர்கள் 1988 ஜூன் முதல் 1995 டிசம்பர் வரை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றவில்லை எனக் கூறி, அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து 1995ம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு தலைமை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற்று தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1988 முதல் 1995 வரை பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும். இந்த காலவரம்பு இல்லாமல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணப் பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11,239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது அரசுக்கு 278 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று வாதிட்டார்.

அரசுத்தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 1995ம் ஆண்டு டிசம்பருக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று காலவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த காலவரம்புக்குப் பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற உரிமையில்லை. அதனால் 1995 ம் ஆண்டுக்கு பின் பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post 1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!