×

கல்லூரி பாடத்தில் அரியர்ஸை முடிக்குமாறு அறிவுரை கூறிய தாய், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்து உடல்களை சாக்குமூட்டையில் கட்டிய மாணவன்

சென்னை: அரியர்ஸை முடிக்குமாறு அறிவுரை கூறிய தாய், தம்பியை கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, சாக்குமூட்டையில் உடல்களை கட்டிய சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கு பின்னர் தற்கொலைக்கு முயன்று கடற்கரையில் பதுங்கிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் திருநகர் 1வது தெருவை சேர்ந்தவர் முருகன் (50). ஓமன் நாட்டில் பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மா (45). சென்னை அண்ணா சாலையில் உள்ள அக்குபஞ்சர் மையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன்கள் நித்திஷ் (20), வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகன் சஞ்சய் (15). திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முருகன் விடுமுறையில் ஓமன் நாட்டிலிருந்து வந்து குடும்பத்துடன் தங்கி விட்டு மீண்டும் ஓமன் சென்றுள்ளார். இந்நிலையில், நித்திஷ் கடந்த 20ம் தேதி இரவு கணக்கர் தெருவில் வசிக்கும் தனது பெரியம்மா மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் தனது வீட்டின் சாவி மற்றும் ஒரு செல்போனை ஒரு பையில் மடித்து அதை அவர்களது வீட்டு வாசல் அருகே வைத்துவிட்டு சென்று விட்டார். இதை தொடர்ந்து, தான் சாவியையும், போனையும் வைத்து விட்டு வந்தது பற்றி மகாலட்சுமி மற்றும் அத்தை மகள் பிரியாவுக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நித்திஷ் அனுப்பிய மெசேஜை பிரியா நேற்று முன்தினம் இரவுதான் பார்த்துள்ளார். அந்த மெசேஜின் அடிப்படையில் தனது வீட்டு வாசலில் நித்திஷ் வைத்து விட்டு போன பையை எடுத்து அதில் வைக்கப்பட்டிருந்த செல்போனை பிரியா ஆன் செய்து பார்த்த போது அதில் சில வாய்ஸ் மெசேஜ்கள் இருந்தன. உடனே அந்த மெசேஜை ப்ளே செய்து கேட்டுள்ளார். அதில், தனது அம்மாவையும், தம்பியையும் கொலை செய்து விட்டதாக நித்திஷ் பேசி இருந்தார். மேலும் தான் சாகப்போவதாகவும் அதனால் தன்னுடைய அம்மாவையும் தம்பியையும் தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் தன்னை மன்னித்து விடும்படியும் தன் தந்தை முருகனுக்கும் அந்த போனில் மெசேஜ் போட்டுள்ளதும் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, மகாலட்சுமிக்கு தெரிவித்துள்ளார்.

உடனடியாக பத்மாவின் வீட்டிற்கு மகாலட்சுமி சென்றார். அங்கு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு சாக்கு மூட்டைகள் ரத்த கறையுடன் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. இதுகுறித்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பத்மாவும், சஞ்சய்யும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் மகாலட்சுமியிடம் விசாரணை செய்தனர். அதன் அடிப்படையில் நித்திஷை தேடிப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நள்ளிரவு முழுவதும் சுற்றுவட்டாரப் பகுதியில் தீவிரமாக தேடினர். அப்போது பலகை தொட்டி குப்பம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இருக்கையில் நித்திஷ் உறங்கிக்கொண்டு இருப்பதை கண்டுபிடித்து அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பிறகு எதற்காக தாயையும், தம்பியையும் கொலை செய்தார் என நித்திஷிடம் விசாரணை செய்தனர். நித்திஷ் பி.எஸ்சி டேட்டா சயின்ஸ் படித்து வந்துள்ளார். இவருக்கு படிப்பு சரியாக வராததால் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறாமல் பாடத்தில் அரியர்ஸ் வைத்துள்ளார். மொத்தம் 14 அரியர்ஸ் வந்துள்ளது. இவ்வாறு அரியர்ஸ் வைத்துள்ளதால் பத்மா, மகன் நித்திஷை நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டித்துள்ளார். மேலும் ஓமனிலிருந்து வீட்டுக்கு வந்த தந்தை முருகனும் மகனிடம் நீ நன்றாக படிக்க வேண்டும். குடும்பத்தை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு அவரும் கண்டித்துள்ளார். இப்படி தாயும், தந்தையும் அடிக்கடி நித்திஷ் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், நித்திஷுக்கு படிப்பு சரியாக வரவில்லை. தற்போது அரியர்ஸ் முழுமையாக எழுதியிருந்தாலும் அதில் எத்தனை தேர்ச்சி பெறுவார் என்று தெரியாத நிலையில் இருந்துள்ளது. இதனால் நித்திஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே சரியாக படிக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் தனது தந்தை வெளிநாட்டில் இருப்பதால் தான் உயிரிழந்த பிறகு தாயும், தம்பியும் இங்கே தனியாக இருப்பார்கள் என்ற காரணத்திற்காக தான் தற்கொலை செய்வதற்கு முன் தாயையும், தம்பியையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி கடந்த வியாழக்கிழமை காலை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த தாயிடம் பேசியபடி இருந்த நித்திஷ் திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பத்மா அலறியபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். தாயின் அலறல் சத்தத்தை கேட்டு உள்ளே இன்னொரு அறையில் இருந்த சஞ்சய் வெளியே ஓடி வந்துள்ளார். உடனே அவரையும் நித்திஷ் கத்தியால் கழுத்தில் குத்தவே அவரும் மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் இருவரும் துடி துடித்து அதே இடத்தில் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் இருவரின் உடல்களையும் சாக்கு மூட்டைகளில் தனித்தனியே கட்டி வைத்துள்ளார். தான் கையில் வைத்திருந்த கத்தியையும் ஒரு கவரில் மடித்து அங்கே வைத்துவிட்டு சிறிது நேரம் அங்கேயே இருந்துள்ளார். பின்னர் வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு ஓடும் ரயிலில் தலையை கொடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து திருவொற்றியூர் மாணிக்கம் நகர் வந்து ரயிலுக்காக தண்டவாளம் அருகே காத்திருந்தார். சற்று நேரத்தில் ரயில் வருவதை பார்த்து ரயில் முன்பு பாய்ந்து விடலாம் என நினைத்துள்ளார். ஆனால் ரயில் அருகே வரும்போது நித்திஷுக்கு ரயில் முன்பு பாய தைரியம் வரவில்லை. இதனால் அங்கிருந்து நடந்து திருவொற்றியூரில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு சென்று அனைவரையும் பார்த்து சகஜமாக பேசி உள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பெரியம்மா மகாலட்சுமி வீட்டிற்கு வந்து சாவி, போனை வைத்துவிட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு தியேட்டரில் இரவு படம் பார்த்து வெளியே வந்துள்ளார். பின்னர் எங்கே செல்வது என்று தெரியாமல் நடந்து சென்ற அவர் நேராக பலகைகுப்பம் கடற்கரைக்கு சென்று கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள நினைத்துள்ளார். ஆனாலும் அவருக்கு துணிச்சல் வரவில்லை. இதையடுத்து அங்கிருந்து அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பயணிகள் இருக்கையில் படுத்து உறங்கி விட்டார். அப்போதுதான் போலீசார் அவரை பிடித்துள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இந்த இரட்டைக் கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் நித்திஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பத்மா, சஞ்சய் இருவரும் கொலை செய்யப்பட்டதும் அவரை மூத்த மகன் நித்திஷ் கொலை செய்த விவரமும் ஓமன் நாட்டில் உள்ள முருகனுக்கு போன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை கேட்டதும் முருகன் கதறி அழுதுள்ளார். அரியர்ஸை முடிக்குமாறு தாய், தந்தை வற்புறுத்தியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவன் நித்திஷ், தனது தாய், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post கல்லூரி பாடத்தில் அரியர்ஸை முடிக்குமாறு அறிவுரை கூறிய தாய், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்து உடல்களை சாக்குமூட்டையில் கட்டிய மாணவன் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Arriars ,Thiruvottiyur ,
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...