×

எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்பது பொய் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி பேரவையை முடக்க நினைப்பதா? அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை: எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்பது அப்பட்டமான பொய், இல்லாத குற்றசாட்டுகளை கூறி சட்டமன்றத்தை எடப்பாடி பழனிசாமி முடக்க நினைக்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் ஏதாவது பிரச்சனையை கிளப்ப வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்களாக சட்டமன்றத்தில் இல்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம் கூறி சட்டமன்றத்தை முடக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் எங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் அவர்கள் வெளிநடப்பு செய்தவுடன் முதல்வர், அவர்களை மீண்டும் அழைத்து அவர்கள் தங்களுடைய கருத்தை சொல்வதற்கு வாய்ப்புகளை தாருங்கள் என்று கேட்டார்.

எனவே, அவர்கள் தங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும். அதேபோல, சட்டப் பேரவைத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் எதாவது கருத்தை சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்றார். நேற்று முன்தினம் போல நாங்கள் முற்றுகையிட்டிருந்தால் உடனடியாக 1 வாரம் சஸ்பெண்ட் அல்லது தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருப்பார்கள். ஆனால், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் தங்களுடைய வாய்ப்புகளை தரவேண்டும் என்று எண்ணி முதல்வர், அவர்களை மன்னித்து திருப்பி அவர்களுக்கு அழைப்பை தாருங்கள், அவர்கள் வந்து தங்கள் கருத்துக்களை சொல்லட்டும் என்று சொன்ன பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் அவர். ஆனால் வெளியில் வந்து என்ன சொல்கிறார்கள்; பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை, முதல்வர் எங்களுக்கு பேச அனுமதி தரவில்லை; சட்டப் பேரவைத் தலைவர் எங்களுக்கு பேசுவதற்கு அனுமதி தரவில்லை, இதையெல்லாம், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள், மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் தோல்வியை மறைப்பதற்காக எடப்படி பழனிச்சாமியும் அவரைச் சேர்ந்தவர்களும் எத்தனை முயற்சிகள் செய்தாலும், ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கின்ற முதல்வர் என்றைக்குமே எதிர்க்கட்சிகளை மதிக்கக்கூடியவர் என்பதை கடந்த இரண்டு நாட்களாக இந்த சம்பவங்கள் மூலமாக நிரூபித்து இருக்கிறார். கள்ளச்சாராயம் காய்ச்சுவது பற்றி கவனத்திற்கு வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுதான் வருகிறது. பல வழக்குகள் போடப்படுகின்றன. பலர் மீது குண்டாஸ் வழக்குகளும் போடப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. எனவே, கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்பதிலே, எல்லோரையும் விட அக்கறை உள்ள அரசு முதல்வரின் அரசு. எனவே, இதில் யாரும் அரசியல் செய்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்பது பொய் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி பேரவையை முடக்க நினைப்பதா? அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupati ,Chennai ,Law Minister ,Palanisami ,Assembly ,Chennai Chief Secretariat ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...