- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம்
- டாக்டர்
- ரவிவர்மன்
- கள்ளக்குறிச்சி கருணாபுரம்
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் மருத்துவர் ரவிவர்மன், நேற்று மதியம் மாவட்ட அதிகாரிகளுடன் சென்று கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, இறப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். விஷ சாராயம் குடித்து பலியான சுரேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவரின் குழந்தைக்கு படிப்பு உதவி தேவைப்பட்டால் ஆணையத்தை அணுகினால் உதவி வழங்கப்படும் என்றார். பின்னர் சின்னப்பிள்ளை(65) என்பவரின் வீட்டிற்கு சென்று எப்படி இறந்தார், என கேட்டறிந்தார். அப்போது விஷசாராயம் என்பதை தெரியாமல் குடித்ததுடன், தனக்கு ஒன்றுமில்லை என்று கூறி நாள் கடத்தி விட்டார். உடனடியாக சொல்லி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் கூறினர். அதேபோல இறந்த நாகப்பிள்ளை என்பவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும். மேலும் குறிப்பாக பெண்கள், ஆண்களுக்கு உரிய ஆலோசனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து எந்த வகையிலும் சாராயம் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதை கண்டிப்பாக பின்பற்றி இருக்க வேண்டும். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளோர் குணமடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவர்களை நியமித்து உயர்தர சிகிச்சையை வழங்கி வருகிறது. இருப்பினும் எங்கள் பணி, எங்கெல்லாம் ஆதிதிராவிட வகுப்பினர் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கு தேவையான உதவிகள், தொடர் உயிரிழப்புகள் ஏற்படாமல் பாதுகாத்தல் மற்றும் மறுவாழ்வு கிடைப்பதை உறுதி செய்து தருவதாகும். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பட்டியலினத்தவர்களாக உள்ளனர். ஆணையத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ள சட்ட விதிகளின்படி இச்சம்பவம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். விசாரணை அறிக்கை இன்னும் 2 நாட்களுக்குள் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஒன்றிய அரசிற்கு வழங்கப்படும் என்றார்.
* 3 சாராய வியாபாரிகள் மீது கொலை வழக்கு பதிவு
விஷ சாராயம் விற்ற கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் மெத்தனால் கலந்த சாராயம் என தெரிந்தே விற்பனை செய்த கச்சிராயபாளையம் மாதவச்சேரியை சேர்ந்த ராமர் (29), சேஷ சமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் ராஜா(எ) நடுப்பையன் மற்றும் மெத்தனால் சப்ளை செய்த மாதேஷ் ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விஷ சாராயம் குடித்து இறந்த கண்ணன் மகன் மணிகண்டன், ராமர் விற்ற விஷ சாராயத்தை குடித்தே தந்தை உயிரிழந்துள்ளார். எனவே, ராமர் மீதும், அவர்களுக்கு சப்ளை செய்த சின்னதுரை, ஜோசப் ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சாராய வியாபாரி ராமர் மற்றும் சின்னதுரை, ஜோசப்ராஜா ஆகிய 3 பேர் மீதும் கச்சிராயபாளையம் போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கண்ணுக்குட்டி குடும்பத்தினர் மீது 50க்கும் மேற்பட்ட சாராய வழக்கு
விஷ சாராய விற்று கைதான பிரபல வியாபாரி கண்ணுக்குட்டிக்கு குடிபழக்கம் இல்லை. ஆனால் சுமார் 25 ஆண்டுகளாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்து உள்ளார். முதலில் கோமுகி ஆற்றங்கரையோரம் மறைவான பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட இவர், நாளடைவில் தனது வீட்டின் அருகிலேயே கொட்டகை அமைத்து சாராயக் கடை போன்று நடத்தி வந்துள்ளார். விற்பனை மேலும் அதிகரிக்க தொடங்கியதால் வீடு மற்றும் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து சாராயத்தை மொத்தமாக வாங்கி வைக்க குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். டாஸ்மாக் கடை மூடிய பிறகு இரவு நேரங்களிலும், கடை திறப்பதற்கு முன்பு காலை நேரங்களிலும் விற்றுள்ளார். ப இவருக்கு குடிப்பழக்கம் இல்லாத காரணத்தால் ெமத்தனால் சாராயம் வாங்குவதற்கு குடிப்பழக்கம் உடைய தனது தம்பி தாமோதரனை பயன்படுத்தி வந்துள்ளார். தற்போதுவரை கண்ணுக்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாராய விற்பனை, கடத்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* விஷசாராயம் குடித்துவிட்டு மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட வாலிபர்கள்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் ஆயந்தூர் அருகே சித்தேரிப்பட்டை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் (24), பிரவீன் (25). இவர்கள் 2 பேரும் கடந்த 20ம் தேதி இரவு சங்கராபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மற்றவர்களோடு சேர்ந்து சாராயம் குடித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இவர்கள் இருவருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனால் உடல்நிலை சரிவராமல் தொடர்ந்து மோசமானது. மேலும் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்கள் குறித்த செய்தி அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் இது குறித்து தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் அவர்கள் இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 2 பேரிடமும் விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மனும் விசாரணை நடத்தினார்.
* சாராயம் குடித்து வீட்டில் சாவு சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் (45), இளையராஜா (35) ஆகிய இருவரும் விஷ சாராயம் குடித்து வீட்டிலேயே இறந்த நிலையில் ஜெயமுருகன் உடல் புதைக்கப்பட்டதாகவும், இளையராஜா உடல் எரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரண உதவி கேட்டு உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்துள்ளனர். புதைக்கப்பட்ட ஜெயமுருகன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து, அங்கேயே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
* தின்னர் எனகூறி போலி பில் மூலம் மெத்தனால் வாங்கி விற்ற கொடுமை: சிபிசிஐடி விசாரணையில் திடுக்
விஷ சாராயத்தில் கலந்த மெத்தனாலை விற்ற வியாபாரி மாதேஷிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு டர்பன்டைன் எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து மெத்தனால் வாங்கியது தெரிய வந்தது. அதாவது, ஆன்லைன் மூலம் இந்த ஆலையை கண்டுபிடித்து, தின்னர் என்ற பெயரில் ஜிஎஸ்டி வரி இல்லாமல் போலி பில் தயாரித்து மாதேஷ் 330 லிட்டர் மெத்தனால் வாங்கியுள்ளார். மாதேஷிடமிருந்து சின்னதுரை 60 லிட்டர் மெத்தனால் 4 டியூப், 30 லிட்டர் மெத்தனால் 3 டியூப் வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து கண்ணுக்குட்டி வாங்கி உள்ளார்.
330 லிட்டர் மெத்தனாலில் 330 லிட்டர் தண்ணீரை கலந்து பாக்கெட் சாராயமாக விற்றுள்ளார். முதலில் ஒரு லிட்டர் மெத்தனாலில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து விற்றுள்ளனர். அதை வாங்கி குடித்தவர்கள் சரியாக போதை ஏறவில்லை என்று திட்டியதால், கலக்கப்படும் தண்ணீரை அரை லிட்டராக குறைத்துள்ளனர். இதுவே விஷ சாராயமாக மாறி 55 பேரின் உயிரை குடித்துள்ளது. சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து மாதவரத்தில் இயங்கும் டர்பன்டைன் ஆலை யாருக்கு சொந்தமானது? அவர் மெத்தனாலை தனியாருக்கு விற்பனை செய்தது ஏன்? தின்னர் என்ற பெயரில் விற்றது ஏன்? என சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
The post சிறந்த மருத்துவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து உயர்தர சிகிச்சை அளிக்கிறது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பாராட்டு appeared first on Dinakaran.